"வெடி' ரெடியாகி விட்டது என்று சொல்வதற்காக செய்தியாளர்களை சந்தித்தது "வெடி' குழு. இயக்குனர் பிரபு தேவா இசையமைப்பாளர், விஜய் ஆண்டனி, நாயகி சமீரா ரெட்டி, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஆகியோரோடு செய்தியாளர்களை சந்தித்த நாயகன் விஷால் "வெடி' அனுபவம் பற்றி உற்சாகமாக கூறியதாவது: |
"வெடி' படத்திற்கான உரிமையை ஓராண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்து விட்டோம். பிரபு தேவா தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பாலாவின் அவன் இவன் படம் முடிய தாமதமானதால் "வெடி'யும் தாமதமானது. இருப்பினும் ஆரம்பித்ததே தெரியாமல் இப்போது "வெடி' முடிந்து இம்மாத இறுதியில் ரிலிசுக்கு தயாராக இருக்கிறது. அவன் இவன் படத்திற்கு பிறகு நடிகனாக பொறுப்பு வந்திருக்கிறது. அதற்கேற்ப "வெடி'யில் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறேன். பிரபு தேவா இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியான அனுபவம். இந்த படத்தை பொறுத்தவரை மற்றொரு மகிழ்ச்சியான விஷயம் நாயகி சமீரா ரெட்டி. முதல் முறையாக எனக்கு சரிசமமான நாயகி கிடைத்திருக்கிறார். வழக்கமாக நாயகிகளை எனது உயரத்திற்கு ஏற்ப தயார் செய்வார்கள். ஆனால் சமீராவோ எனக்கேற்ற உயரத்தோடு இருக்கிறார். இப்படி உற்சாகமாக கூறும் விஷாலுக்கு ஒரே குறை படத்தில் அவருக்கு இயக்குனர் நடனமாடுவதற்கு அதிக வாய்ப்பு தரவில்லை என்பது தான். அந்த அளவுக்கு மிடுக்கான வகையில் விஷால் கேரக்டரை பிரபு தேவா உருவாக்கி இருக்கிறார். பின்னர் நாயகி சமீரா ரெட்டி பேசிய போது, பிரபு தேவா நடிக்க விருப்பமா என்று கேட்டவுடன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டதாக கூறினார். கதை என்ன?, எத்தனை நாயகிகள் என்ற கேள்வியெல்லாம் கேட்காமலேயே ஓகே சொல்லி விட்டதாக கூறிய அவர் உயரமான நாயகியோடு நடிக்க வைத்தற்காகவும் பிரபு தேவாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். |