நிகழ்ச்சியில் நடிகர் விஜயகாந்த், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், அமீர், பாலாஜி சக்தி வேல், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, சிவசக்தி பாண்டியன், பி.சி.ஸ்ரீராம், நடிகர்கள் சிம்பு, ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாடல் சிடியை வெளியிட்டு பேசிய நடிகர் விஜயகாந்த் கூறியதாவது:
நீண்ட இடைவெளிக்குப்பிறகு சினிமா தொடர்பான விழாவில் பங்கேற்கிறேன். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நான் விழாக்களில் பங்கேற்பது குறைந்து விட்டது. எந்த விழாவிலா வது நான் பங்கேற்றால், என்னை அழைத்தவர்கள் மீது கட்சி முத்திரை விழுந்துவிடும் என்ற காரணத்தினா லேயே விழாக்களில் பங்கேற்பதை குறைத்துக் கொண்டுள்ளேன்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரையரங்கில் படத்தின் முன்னோட் டத்தைப் பார்க்கிறேன். படம் பிரமிப்பான அனுபவத்தை தருகிறது. இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாக கருதுகிறேன். புதியவர்களின் முயற்சி இது. இந்த படத்தில் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் மகன் ஜானி அறிமுகமாகிறார்.இந்த தயாரிப்பாளர் என்னை வைத்து படம் எடுக்க விரும்பியவர்.
ஆனால் அவரிடம் நான் அரசியல் கட்சி துவங்கி விட்டேன். இப்போது என்னை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று கூறினேன். அரசியலில் நுழைந்து விட்டதால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக என்னை வைத்து நானே படம் எடுத்துக்கொள்கிறேன்.
எனது ஆயுள் வரை நடித்துக் கொண்டிருப்பேன். அரசியலில் ஈடுபட்டாலும், தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பேன். நடிகர்கள், தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை உணர்ந்து நடிக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்து காணாமல் போய்விட்டன. கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்த போது, சம்பளம் உயர்த்தப்பட்டது.
ஆனால் தற்போதைய நிலையை உணர்ந்து நடிகர்கள் நடிக்க வேண்டும். சினிமாவை யாரும் அழிக்க முடியாது. எத்தனை சோதனைகள் வந்தாலும், சினிமா தழைத்து நிற்கும்.
நடிகர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சி விடக்கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். போராடினால் வெற்றி கிடைக்கும். இந்த படத்தின் நாயகனும், துணிச்சலோடு போராட வேண்டும். வெற்றி கிடைத்தவுடன் சம்பளத்தை திடீரென உயர்த்தி விடாமல் படிப்படியாக முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். |