நிகழ்ச்சியில் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராமநாராயணன் முன்னிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் ஆடியோ சிடியை வெளியிட, பிரபல இயக்குனர் சசிகுமார் பெற்று கொண்டார்.
இந்தநிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும் போது கூறியதாவது: நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கலந்து கொள்ளும் விழா இது. எந்திரன் பட ஷýட்டிங்கில் பிசியாக இருப்பதால் விழாக்களில் கலந்து கொள்ள நேரம் கிடைப்பதில்லை. எனினும் இயக்குனர் ஷங்கர் அழைத்ததுமே இந்த விழாவில் கலந்து கொள்ள ஒப்பு கொண்டேன். காரணம் ஷங்கர் என்னை மிகவும் ஈர்த்திருக்கிறார். சிவாஜி மற்றும் எந்திரன் படங்களின் மூலம் ஷங்கர் என்னும் நல்ல நண்பர் மற்றும் உழைப்பாளி எனக்கு அறிமுகமாகியுள்ளார். எந்திரன் படத்தின் ஷýட்டிங் 85 சதவிகிதம் முடிந்துவிட்டது என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நான் மிகவும் மதிக்கும் நடிகர்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதா பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜிபி கார்டன் துவக்க விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அனைவரும் விஜிபி பன்னீர் தாசின் உழைப்பை பாராட்டி பேசினர். எம்.ஆர்.ராதா பேச எழுந்ததும், தனக்கே உரியபாணியில், என்ன எல்லோரும் விஜிபி பன்னீர்தாஸ் மட்டும்தான் உழைத்தது போல அவரை பாராட்டுகிறீர்கள், ஏன் நான் உழைக்கவில்லையா? நீங்கள் உழைக்கவில்லையா? எல்லோரும் தான் உழைக்கிறோம்.
அதேபோல் வி.ஜி.பன்னீர்தாசும் உழைக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம், நாம் மாடுகளை போல உழைக்கிறோம். அவர் மனிதரை போல உழைத்திருக்கிறார். நான் எங்கோ 500 ஏக்கர் வாங்கியிருக்கிறேன். அவர் கடலுக்கு அருகே 100 ஏக்கர் வாங்கியிருக்கிறார். இது அவரது புத்திசாலித்தனம். இவ்வாறு எம்.ஆர்.ராதா பேசினார்.
அவர் கூறியது போல அறிவை பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக உழைத்தால் வெற்றிபெறலாம். ஈரம் படத்திலும் அந்த புத்திசாலித்தனம் தெரிகிறது. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
முன்னதாக தயாரிப்பாளர், இயக்குனர் ஷங்கர் வரவேற்று பேசியதாவது: மாறுபட்ட படங்களை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அந்தவகையில் முந்தைய தயாரிப்புகளிலிருந்து இந்த படம் மாறுபட்டதாக இருக்கும். ஈரம் படம், த்ரில்லர் வகையை சேர்ந்தது. இந்த படத்தை பார்த்து பல இடங்களில் நான் கைதட்டினேன், கண்கலங்கினேன்.
பொதுவாக த்ரில்லர் படங்களை 2வது முறை பார்க்க தோன்றாது. ஆனால் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும். ஹிட்ச்காக் படத்தை பார்த்தது போன்ற நிறைவு ஏற்பட்டுள்ளது. த்ரில்லர் என்பதற்காக அச்சுறுத்த மட்டும் கூடாது, கதையும், புதுமையும் இருக்க வேண்டும், இந்த படத்தில் ஈரம் ஒரு புதுமையான அம்சமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் மிஷ்கின், வசந்தபாலன், கே.வி. ஆனந்த், படத்தின் இயக்குனர் அறிவழகன், நாயகர்கள் ஆதி, நந்தா, நாயகி சிந்துமேனன், விநியோகிஸ்தர் சங்க செயலாளர் கலைப்புலி சேகரன், கவிஞர் விவேகா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசியவர்கள் இளம் இசையமைப்பாளர் தமனின் பாடல்கள் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தனர்.
ஜினி பற்றி ஷங்கர் நெகிழ்ச்சி தாமாக வந்து உதவி செய்யும் நல்ல நண்பர் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இயக்குனர் ஷங்கர் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். ஈரம் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அவர் இது தொடர்பாக கூறியதாவது:
இன்று காலை எனக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. எல்லோரும் விலகி செல்லும் போது நம்மோடு இருப்பவரே நல்ல நண்பன். அதே போல எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார். எனக்கும் கஷ்டங்கள் உண்டு. அந்த கஷ்டங்களுக்கு மத்தியில் தானாகவே வந்து உதவும் நல்ல நண்பராக சூப்பர் ஸ்டார் அமைந்திருக்கிறார். சிவாஜி மற்றும் எந்திரன் படங்களில் பணியாற்றியதன் மூலம் ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பராக கிடைத்திருக்கிறார்.
என் வெற்றியல்ல; தமிழ் சினிமாவின் வெற்றி தொடர்ந்து 3 படங்களை வெற்றிப்படமாக கொடுத்த இயக்குனர் சசிகுமார், இவை தன்னுடைய வெற்றியல்ல என்றும், தமிழ் சினிமாவின் வெற்றி என்றும் கூறினார். ஈரம் விழாவில் சசிகுமார் பேசிய போது கூறியதாவது:
இயக்கம், தயாரிப்பு, நடிப்பு ஆகிய 3 துறைகளிலும் நான் வெற்றி பெற்றிருப்பதாக இயக்குனர் ஷங்கர் பாராட்டினார். ஆனால் உண்மையில் இது என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல. தமிழ் சினிமாவின் வெற்றி இது. எல்லா படங்களுமே வெற்றி அடைய வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
இந்த வெற்றிக்கு மூலக்காரணம் ஷங்கர் தயாரித்த காதல் படமே. அந்த படத்தில் முன்வைத்தே நான் விநியோகம் செய்தேன். என்னால் அதிகதூரம் ஓட முடியாது. எனக்கு பின் வருபவர்கள் மேலும் பல நல்ல படங்களை தருவார்கள். அடுத்த தலைமுறைக்காக இப்போது நாங்கள் உழைத்து கொண்டிருக் கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்தபாலன் பேசும் போது, தமிழில் கடந்த 4 ஆண்டுகளை மாற்று சினிமாவின் பொற்காலம் என்று கூறக்கூடிய அளவில் நல்ல படங்கள் வெற்றி பெற்று வருகிறது. இதனை காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக ஷங்கர் துவக்கி வைத்தார் என்று பாராட்டு தெரிவித்தார். |