Maalaisudar 
 
 
 
 
 
 
.
ஆறுமனமே!
 
.
Sunday, 02 August, 2009 02:59 PM
.
 பாசத்திற்கும் கூட கணக்கு பார்க்கும் ஒரு முன்கோபக்கார தந்தை. அவரது மனம் போல நடந்து கொண்டு நல்ல பெயர் வாங்கும் மூத்த மகன். தந்தையால் உதவாக்கரை என்று முத்திரை குத்தப்பட்ட இளைய மகன். இவர்களோடு பாசப்போராட்டம் நடத்தும் தாய். இப்படி குடும்ப பாங்கான படத்திற்கு தேவையான மாமூலான எல்லா அம்சங்களையும் பெற்றிருக்கிறது ஆறுமனமே!. எதிர்பார்க்க கூடியது போலவே, இந்த உதவாக்கரை மகன் தனது அருமையை தந்தைக்கு புரிய வைத்து, நல்ல பிள்ளையாவது தான் படத்தின் கதை.
இதற்கிடையே குடும்ப படங்களுக்கே உண்டான "கேன்டிமன்ட்', "திடீர்' திருப்பங் களுக்கும் பஞ்சம் இல்லை.
.
தந்தை போற்றும் மூத்த மகனாக, நடிகர் ஸ்ரீமானும் அவர் வெறுக்கும் இளைய மகனாக புதுமுகம் தீபக்கும் நடித்துள்ளார். தீபக்கை காதலிக்கும் இளம் பெண்ணாக நிக்கோல் வருகிறார்.

மூத்த சகோதரரா (அ) உற்ற நண்பனா, கூப்பிடு ஸ்ரீமனை என்றாகி விட்டது. அப்பாவுக்கு அடங்கிய பிள்ளை வேடத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். பொதுப்பணித்துறை இன்ஜினியராக, நேர்மையை காப்பாற்றுகிறார்.

ஆனால், ஆச்சர்யப்படும்படி அறிமுக நாயகன் "தீபக்' முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு நடிப்பில் பாசாகி விடுகிறார். ஆட்டோ டிரைவராக வரும் அவர், அடிதடி காட்சிகளிலும் சரி, காதல் காட்சிகளிலும் சரி, பாசத்தால் உருக நேரும் போதும் சரி, தடுமாற்றத்திற்கே இடமளிக்காமல் இயல்பாகவே நடித்திருக்கிறார்.

ஆனால், திரைக்கதை தேவையான அளவுக்கு அவரோடு ஒத்துழைக்கவில்லை. அப்பாவுக்கு அவர் மீது ஏன் கோபம் என்ற காரணம் தெளிவாக சொல்லப்படாமலே படம் ஆரம்பமாகிறது. அதையும் மீறி, தந்தையின் வெறுப்பை புரிந்து கொண்டவராக அடங்கிப் போகும் பிள்ளையாக வளைய வருகிறார்.

அதே போல, நல்ல பிள்ளையாக தன்னை நிரூபிக்க அவருக்கு கிடைப்பதெல்லாம் சகோதரன் மறைவுக்கு பின், அவரது ரகசிய திருமணத்தை மறைத்து, விதவை அன்னியை தன்னோடு வைத்து காப்பாற்றுவதும், அதனால் மேலும் தந்தையின் வெறுப்புக்கு ஆளாவதும் தான். கடைசியில் உண்மை தெரியும் போது, அவர் தந்தை மெச்சும் மகனாகி விடுகிறார்.

ஒரு மகனை நல்லவனாக்க, நல்லவனாக இருந்த மூத்த மகனை கெட்டவனாக்கி இருக்கிறார் இயக்குனர் சுதீஷ் சங்கர். அதோடு, தெரிந்த மணந்த மனைவி, தெரியாமல் மணந்த மனைவி என அவரது மறைவுக்கு பின் இரண்டு விதவைகளையும் உருவாக்கி விடுகிறார்.

காதல் திருமணம் செய்து விதவையான கார்த்திகா, மகனோடு நடத்தும் வாழ்க்கை போராட்டம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, முதல் மனைவியாக வருபவர், தந்தையையும் இழந்து கணவனையையும் அவரது விதவையாக இருக்கும் உரிமை யையும் இழந்து வெளியேறுவது நெஞ்சை பதைக்க வைக்கிறது.

செண்டிமன்டை கொஞ்சம் கருணையோடு கையாண்டு இருக்கலாம். தந்தையாக வரும் ராஜேஷின் பிடிவாதமும், முரட்டு கோபமும் அவருக்கு உரிய டிரேட்மார்க். நாயகி நிக்கோல் கவர்ச்சி காட்டும் வேலை கூட இல்லாமல் பாவடை தாவணியில் பவனி வருகிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம் அண்ணன் பெரியசாமி, தம்பி சின்னசாமி என கஞ்சா கருப்புவுக்கு இரட்டை வேடம். ஆனால், பெரியசாமி எஸ்கேப் ஆன பிறகு சின்னசாமி வருவதால் பெரிதாக வித்யாசம் தெரியவில்லை. இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்களை கார்திகாவின் நடிப்பு தாங்கி நிற்கிறது.
| |

மற்றவை :