Maalaisudar 
 
 
 
 
 
 
.
புதுமையான கதை "நீதி'-1972
 
.
Sunday, 14 June, 2009 02:55 PM
.
 பிறமொழி படங்களை தழுவி தமிழில் பல படங்களை தயாரித்து வெற்றி பெற்ற கே.பாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த மற்றுமொரு மொழி மாற்று படம்தான் "நீதி'. ராஜேஷ் கன்னா நடித்து இந்தியில் வெற்றி பெற்ற "துஷ்மன்' என்ற படத்தை தழுவி இந்த படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தின் சிறப்பு அதுவரை இல்லாத புதுமையான கதைக்கருவை களமாக கொண்டதாகும்.
.
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லாத லாரி டிரைவர் ராஜா மனம் போன போக்கில் மது, மாது என வாழ்ந்து வருகிறான். ஒருநாள் குடிபோதையில் லாரி ஓட்டிச் சென்ற ராஜா, லாரியை ராமு என்ற விவசாயியின் மீது ஏற்றி அவனை சாகடித்து விடுகிறான். அவனை மட்டும் நம்பியிருந்த ஊனமுற்ற தந்தை, பார்வையற்ற தாயார், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், திருமணமாகாத ஒரு தங்கை ஆகியோரை கொண்ட குடும்பம் நாதியற்று நிற்கிறது.

நடந்த விபத்துக்காக ராஜாவுக்கு புதுமையான தண்டனையை நீதிபதி அளிக்கிறார்.
யாரை விபத்தில் கொன்றானோ அந்த ராமுவின் குடும்பத்தோடு தங்கி ஓராண்டுக்கு அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

கட்டுக்காவல் இல்லாமல் சுற்றித் திரிந்த ராஜாவுக்கு முதலில் இந்த தீர்ப்பு பிடிக்காமல் போனாலும், நிர்க்கதியாக நின்ற குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் புடம்போட்ட தங்கமாக மாறுகிறான். தனக்கென்று ஒரு குடும்பம் கிடைத்த மகிழ்ச்சியில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தனது அன்பால் தன்பக்கம் திருப்புகிறான்.

கடைசி வரை அவனை வெறுப்புடன் பார்க்கும் ராமுவின் மனைவியும் இறுதியில் அவனது நல்ல உள்ளத்தை புரிந்து கொள்கிறாள். இடையில் அந்த ஊரில் பயாஸ்கோப் காட்டும் பெண்ணான ராதாவுடன் ஏற்படும் காதல் ராஜாவை சம்சார பந்தத்திலும் கட்டிப் போடுகிறது.

ஊரை அடித்து உலையில் போடும் வில்லனையும் காவல் துறை முன்பு நிறுத்தும் வழக்கமான கதாநாயகனின் பணியையும் ராஜா மேற்கொள்கிறான். ஒரு மனிதனின் வாழ்க்கையையே திசை மாற்றி விடும் இந்த தீர்ப்பை, சிறந்த கதையாக்கி விறுவிறுப்பான சம்பவங்களையும், சென்டிமெண்ட் காட்சிகளையும் இணைத்து படத்தை அற்புதமாக இயக்கினார் சி.வி.ராஜேந்திரன்.

ஏ.எல்.நாராயணன் படத்திற்கு வசனம் எழுத, மஸ்தான் ஒளிப்பதிவு செய்தார். மனித குலத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை அதற்கே பயன்படுத்தலாம் என்ற கருத்தை உள்ளடக்கிய இந்த படத்தில், லாரி டிரைவராக சிவாஜியும், அவரது காதலியாக ஜெயலலிதாவும் நடித்தனர்.

மேலும் சவுகார் ஜானகி, மேஜர் சுந்தர்ராஜன், பாலாஜி, எஸ்.வி. சுப்பையா, காந்திமதி, ஜெய கவுசல்யா, ஆர்.எஸ்.மனோகர், எம்.ஆர்.ஆர்.வாசு, பேபி இந்திரா, மனோரமா, சந்திரபாபு, உசிலைமணி, நாகையா ஆகியோரின் சிறந்த நடிப்பில் படம் சிறப்பாக அமைந்திருந்தது.

"ஒளிவிளக்கு' படத்திலிருந்து ஜெயலலிதாவுக்கும், சவுகார் ஜானகிக்கும் இடையே யார் பெயரை முதலில் போடுவது என்ற சர்ச்சை எழுந்ததையடுத்து, இந்த படத்தில் எந்த நடிகரின் பெயரையும் டைட்டிலில் போடாமல் புதுமை செய்தார் தயாரிப்பாளர் பாலாஜி.

கவிஞர் கண்ணதாசனின் பாடல் களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.
"நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம், இன்னிக்கி ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்'
"மாப்பிள்ளையை பாத்துக்கடி மைனா குட்டி, எனக்கு மந்திரத்தை சொல்லி கொடு நைசா தட்டி'

"ஓடுது பார் நல்ல படம்,ஓட்டுவது சின்னப் பொண்ணு
பொட்டி மேல கண்ண போடுங்க சின்ன பொண்ணு கையில் காச போடுங்க'

 "எங்களது பூமி காக்க வந்த சாமி நம்புற எங்களுக்கு நல்ல  வாழி காமி உன்ன ஒரு கோயில் கட்டி கும்பிடுறோம் சாமி'
என்ற பாடல்கள் படத்தில் இடம் பெற்றன. இதில் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடல் சூப்பர்ஹிட்டானது.

இதற்கு முதன் முதலாக அந்த சமயத்தில் கள், சாராய கடைகள் திறக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். நன்றாக வாழ்ந்த குடும்பத்தின் தலைவன் இறந்ததால் வறுமையின் பிடிக்கு தள்ளப்படுவதையும், குழந்தைகள் பசியால் வாடும் அவலத்தையும் காணும் சிவாஜி, மனம் மாறும் இடத்தில் அற்புதமாக நடித்திருப்பார்.

படத்தில் இடம் பெறும் சண்டை காட்சிகளும் சிறப்பாக அமைந் திருந்தன. படத்தின் கதாநாயகனான சிவாஜி இப்படத்தில் இரண்டு உடைகளை மட்டுமே அணிந்து நடித்திருப்பார். ஆடம்பரமான காட்சி அமைப்புகள், விதவிதமான உடைகள் என எந்த பகட்டும் இன்றி குறைந்த செலவில் மைசூரில் தயாரிக்கப்பட்ட இந்த வண்ணப் படம் வசூலை வாரி குவிக்க தவறவில்லை.

மொத்தத்தில் சிவாஜி ரசிகர்களை கவர்ந்த படமாக "நீதி' அமைந்ததால், வெற்றி என்ற நீதியும் படத்திற்கு கிடைத்தது.
| |

மற்றவை :