Maalaisudar 
 
 
 
 
 
 
.
திரைமறையும்: எங்கும் சினிமா இருக்கும
 
.
Thursday, 04 June, 2009 03:14 PM
.
 வெள்ளித்திரை என்றே சொல்லி பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் சினிமாவில் திரையே இல்லாமல் போகலாம். அப்போது சினிமா எங்கும் இருக்கும். அதே போல ரசிகர்களின் பங்களிப்போடு உருவாகும் "விக்கி சினிமா' பிரபலமாகும்.சினிமாவின் நீளம் குறையும். குறும்படங்கள் வரவேற்பு பெறும்.
.
சென்னையில் நடைபெற்று வந்த சர்வதேச திரைக்கதை பயிலரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் சினிமாவின் எதிர்காலம் மற்றும் இந்திய சினிமா செல்லும் திசை குறித்து திரைப்படத் துறை நிபுணர் கள் சுவாரசியமாக அலசியபோது வெளிப்பட்ட கருத்து கீற்றுகள்தான் இவை.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், சென்னை ஐஐடியோடு இணைந்து சர்வதேச சென்னை திரைக்கதை பயிலரங்கை நடத்தியது. 250 மாணவர்கள் பங்கேற்ற இந்த பயிலரங்கு நேற்று நிறைவடைந்தது.

பாலிவுட் இயக்குனர் பாராட்டு
 திரைக்கதை தொடர்பான பயிலரங்கு நிறைவு நாள் விழாவில் கமல்ஹாசன் போல சூப்பர் ஸ்டார் அந்தஸ்து மிக்க நடிகர் ஆர்வத்தோடு கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்றது ஆச்சரியத்தை அளிப்ப தாகவும், இது மிகவும் வரவேற்கத் தக்கது என்றும் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் கூறினார்.அப்போது நிகழ்ச்சியை வழி நடத்திய அதுல் திவாரி குறுக்கிட்டு, இந்த சூப்பர் ஸ்டார் நிறைவு நாள் விழாவில் மட்டுமல்ல. இது வரை நடந்த பயிலரங்கு முழுவதும் காலை முதல் மாலை வரை விவாதத்தில் தன்னை முழு மூச்சோடு ஈடுபடுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.

நிறைவு நாள் நிகழ்ச்சியில், கமல்ஹாசன், பூனா திரைப்பட கல்லூரியின் அஞ்சும் ராஜபல்லி, திரைப்பட பேராசிரியர் ஹரிஹரன், பிரபல திரைக்கதை எழுத்தாளர் அதுல் திவாரி மற்றும் "ரங் தே பசந்தி' பட இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ், ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திரைப்படத்துறையில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் மற்றும் எதிர்கால போக்குகள் குறித்து கலந்துரையாடினர்.

அப்போது இந்த நிபுணர்கள் எண்ணத்தில் உதித்த மின்னல் கீற்றுகள் வருமாறு:
இந்திய சினிமா மாறும் (அஞ்சும் ராஜபல்லி).

1990 ஆம் ஆண்டு முதல் 2000மாவது ஆண்டு வரை வெளியான இந்தி திரைப்படங்களை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்வோம். இந்த காலத்தில் 854 படங்கள் வெளியாகின.இவற்றில் 14.5 சதவிகித படங்கள் மட்டுமே முதலுக்கு மோசமில்லாமல் அமைந்தன. மற்ற படங்கள் நஷ்டத்தை சந்தித்தன.இதற்கு முக்கிய காரணம் இந்த படங்களின் கதை, ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் சொல்லப்படாமல் போனதுதான். ஆனால் இப்போது இந்த நிலை மாறத் தொடங்கி இருக்கிறது. நல்ல திரைக்கதை ஆசிரியர்கள் உருவாகி உள்ளனர்.

நல்ல திரைக்கதை இல்லையென்று கூறப்பட்டு வந்த நிலை மாறி அற்புதமான திரைக்கதை ஆசிரியர்கள் வந்திருக்கின்றனர். இதனால் இந்திய சினிமா நிச்சயம் மாறும். விக்கி சினிமா உருவாகும் (ஹரிஹரன்).

ரசிகர் மற்றும் படைப்பாளி இடையிலான வேறுபாடு மறைந்து வருகிறது. புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனர் குரோசோவா இயக்கிய ரோஷாமன் திரைப்படத்தை சப்டைட்டிலோடு பார்க்கிறோம். இது குரோசோவா நினைத்திராதது. மேலும் ரோஷாமன் படத்தின் முக்கிய காட்சிகளை மட்டும் 20, 25 நிமிடங்களில் ரிமோட் உதவியோடு பார்த்து விட முடியும்.எனவே ரசிகர்களின் கைக்கு சினிமா வந்துள்ளது. இனி வரும் காலங்களில் ரசிகர்களே படைப்பிலும் பங்கேற்று அதனை மாற்றும் நிலை வரலாம்.

விக்கி பீடியா போல விக்கி சினிமா உருவாகும். திரைப்படத்திற்கான திரை மறைந்து எங்கும் சினிமா இருக்கும்.இந்திய மயமாக வேண்டும் (ராகேஷ் ஓம் பிரகாஷ்).இந்திய சினிமா வருங்காலத்தில் எப்படி இருக்கும் என என்னால் கணிக்க முடியாது. ஆனால் இந்திய சினிமாவின் எல்லைகள் விரிவடைய வேண்டும்.தற்போது தெற்காசிய பகுதியை தாண்டி இந்திய சினிமா பார்க்கப்படுவதில்லை.

இந்த நிலை மாறி இந்திய சினிமா எல்லா நாடுகளுக்கும் செல்ல வேண்டும். அதற்கு பொழுதுபோக்கை நான் இந்தியமயமாக்க வேண்டும். பிராந்திய உணர்வுகள் முக்கியத்துவம் பெற வேண்டும். தமிழ் இலக்கியத்தை தமிழ் இயக்குனராலேயே சிறப்பாக திரையில் கொண்டு வர முடியும். இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். இப்படி, தொழில் நுட்பத்தால் திரைப்படத் துறையில் ஏற்படக் கூடிய மாற்றம் பற்றி சுவையாக நடைபெற்ற விவாதத்திற்கு தலைமையேற்று வழிகாட்டிய அதுல் திவாரி தனது நிறைவு குறிப்பில் திரை இல்லாமல் போகலாம்.

ஆனால் கதை சொல்லும் விதமும், அதற்கான அடிப்படை விஷயங்களும் எந்த காலத்திலும் நிலைத்திருக்கும் என்று முத்தாய்ப்பாக கூறினார். நிகழ்ச்சியின் நிறைவில், இந்த பயிலரங்கு சிறப்பாக நடைபெற உதவிய ஐஐடி மாணவர்கள், பேராசிரியர்களுக்கு கமல்ஹாசன் நன்றி கூறினார்.
 இரா.நரசிம்மன்

 முதல் கார் வாங்கும் முன் முதல் கேமரா வாங்கினேன்
திரைக்கதை பயிலரங்கு நிறைவு நாள் விவாதத்தின் போது, படங்களில் பாடல்கள் தேவையில்லை என்ற கருத்தையொட்டி பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:
படங்களில் பாடல்கள் இடம் பெறுவதற்கு நான் எதிரியல்ல. பாடல்களே இருக்கக் கூடாது என்றும் நான் கூறவில்லை. ஆனால் பாடல்கள் ஒரே மாதிரி ஏன் இருக்க வேண்டும்.ஐந்து அல்லது ஆறு படங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்க வேண்டும். எல்லா படங்களிலுமே பாடல்கள் இடம் பெற வேண்டும்.என்னை பொறுத்தவரை நடன உதவியாளராக இருந்து, பின்னர் 150 பாடல்களுக்கு ஆடிய பிறகு கதையின் பக்கம் வந்தேன். நடனம்தான் என்னை வளர்த்தது.
திரைப்பட தொழில்நுட்பத்தில் எப்போதுமே ஆர்வத்தோடு முதலீடு செய்திருக்கிறேன்.
முதல் கார் வாங்குவதற்கு முன்னர் முதல் கேமரா வாங்கினேன். எதிர்காலத்தில் நான் முதலீடு செய்கிறேன். இப்போது கூட ரெட் ஒன் கேமரா வாங்கியிருக்கிறேன். அதில் தான் படப்பிடிப்பு நடத்து கிறேன். யுடியூப் மூலம் திரைப்படத்தை வெளி யிடுவது தீவிரமடையும். இந்த திரைக்கதை பயிலரங்கு எனக்காக நடத்தப்படுவதல்ல. தமிழ் சினிமாவின் நலன் கருதி நடத்தப்படுவதாகும்.


| |

மற்றவை :