நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் யூடிவி மோஷன் பிக்சர்ஸார் இணைந்து "உன்னைப்போல் ஒருவன்' எனும் திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் கமல் மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கிறார்கள்.
இதே படம் தெலுங்கில் "ஈநாடு' என்ற பெயரில் உருவாகிறது. இப்படத்தை அமெரிக்க திரைப்பட கல்லூரியில் பயின்ற சக்ரி டோ லேடி இயக்குகிறார். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் முதன் முதலாக இப்படத்திற்கு இசையமைக்கிறார். இரா.முருகன் வசனம் எழுதுகிறார். பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் பாடல்களை எழுதுகிறார். மனோஜ் சோனி ஒளிப்பதிவு செய்கிறார்.
"உன்னைப்போல் ஒருவன்' புதிய பட தயாரிப்பு குறித்து நடிகர் கமல் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: " தி வெட்னஸ் டே' என்ற இந்தி படத்தின் மைய கருத்தை கருவாக கொண்டு ஏராளமான பொருட் செலவில் யூ டிவி நிறுவனத்தாருடன் இணைந்து "உன்னைப்போல் ஒருவன்' படத்தை தயாரித்து வருகிறோம். பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதை தலைப்பை இதற்கு வைத்திருப்பதில் பெருமைப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நிருபர்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கமல் கூறியதாவது: அமெரிக்க நாட்டில் ஒரே ஒரு மையக்கருத்தைக் கொண்டு தேர்தலை சந்திப்பார்கள். நம் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் ஒரு மையக்கருத்து இருக்கும். அதே போல தமிழ்நாட்டை பொருத்த அளவில் இப்போது தமிழ் மக்களுக்கு எது மையக்கருத்தாக இருக்கிறதோ அதை பிரதானப்படுத்திதான் இந்த தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகிக வருகிறது.
இப்போது, ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனை தான் இங்கு மையக்கருத்தாக உள்ளது. ஈழத்தில் அமைதி வேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பம். ஈழம் குறித்து படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு உள்ளது. ஆனால் அதற்குரிய தைரியம் எனக்கு கிடையாது. படத்தை ரீமேக் செய்வதில் தவறில்லை. இது கவிப்பேரரசு கம்பன் மூலமாக வந்த சிந்தனையாகும். நல்ல கதை எங்கிருந்தாலும் அதை நம் மக்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
1959ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தான் நான் முதன் முதலில் நடித்த "களத்தூர் கண்ணம்மா' படம் வெளியானது. திரைத்துறையில் நான் காலடி வைத்து 50 ஆண்டுகள் நிறைவடையும். இந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி "உன்னைப்போல் ஒருவன்' திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று என் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அன்றே வெளியிடலாம் என்று நினைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். |