Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
4 ஆண்டுக்கு பிறகு நீதி கிடைத்தது
 
.
Friday, 01 May, 2009 11:22 AM
.

சென்னை, மே 1: கடந்த நான்கு ஆண்டு கால போராட்டத்திற்கு பின்பு எனக்கு நீதி கிடைத்துள்ளது என்று நடிகர் பிரசாந்த் கூறியிருக்கிறார். மீண்டும் திருமணம் செய்து கொள்வது குறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
நடிகர் பிரசாந்த்துக்கும், தொழிலதிபர் மகள் கிரஹலட்சுமிக்கும் 2005-ல் திருமணம் நடைபெற்றது.

.
திருமணம் நடைபெற்ற சில மாதங்களில் இருவரும் பிரிந்து வாழ்ந்தார்கள். பிரச்சனை அதிகரிக்கவே 3 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப நல நீதிமன்றத்தில் பிரசாந்த் மனுதாக்கல் செய்தார். இதனிடையே கிரஹலட்சுமிக்கும், வேணு பிரசாத் என்பவருக்கும் இடையே ஏற்கனவே திருமணம் நடைபெற்றிருப்பதை அறிந்ததும் தனது திருமணம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி பிரசாந்த் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து கிரஹலட்சுமி, பிரசாந்த்தை திருமணம் செய்திருப்பதால் அந்த திருமணம் செல்லாது என்று நீதிபதி அறிவித்தார். இந்த தீர்ப்பை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த நான்கு ஆண்டு காலமாக கோர்ட் வழக்கு என்று போராடி வந்தேன். கிரஹலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.

நான்கு வருடமாக சினிமாவில் கூட கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டேன். கிரஹலட்சுமியை பொறுத்தவரை என்னிடமிருந்து பணம் பறிக்க வேண்டும் என்பதே அவருடைய முக்கிய குறிக்கோள். கடைசியில் நீதி வென்றது. இப்போது நான் நிம்மதி பெருமூச்சு விடுகிறேன். மீண்டும் சினிமாவில் நான் விட்ட இடத்தை பிடிப்பேன். தற்போது மலையூர் மம்பட்டியான் என்ற படத்திலும், பொன்னர் சங்கர் என்ற வரலாற்று படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்வது குறித்து முடிவு செய்வேன். காதலித்து திருமணம் செய்வதாக இருந்தால் அதை பத்திரிகையாளரிடம் தெரிவிப்பேன். எனக்கு திறமையான அப்பா, அம்மா, நல்ல சகோதரி கிடைத்தனர். நல்ல வழக்கறிஞர் கிடைத்ததால் இந்த வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறேன்.

எனது போராட்டக் காலத்தின் போது ரசிகர்களும், பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வந்தனர். வரும் காலத்தில் சினிமாவில் முழு கவனம் செலுத்துவேன். இவ்வாறு பிரசாந்த் கூறினார்.

பிரசாந்த் காதலித்தால் தடுக்க மாட்டோம்
கிரஹலட்சுமியுடனான திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் காதலித்து திருமணம் செய்ய நாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்று அவருடைய தந்தையும், நடிகருமான தியாகராஜன் கூறியிருக்கிறார்.
பிரசாந்த் பேட்டி அளித்த பிறகு அவருடைய தந்தையும், நடிகருமான தியாகராஜன் கூறியதாவது:-

ரசிகைகளாக வரும் பெண்களை என் மகன் ஒரு போதும் காதலிக்க மாட்டான். ரசிகைகளை, ரசிகை களாகத்தான் பார்ப்பான்.
பிரசாந்த் காதல் திருமணம் செய்து கொண்டால் நாங்கள் மிகவும் சந்தோஷப்படுவோம். அவர் காதலித்தால் அதை நாங்கள் தடுக்க மாட்டோம். பெற்றோர் பார்த்து தேர்வு செய்யும் பெண்ணையே திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் முன்பு உறுதியாக இருந்தார். நாங்களும் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தோம்.அதில்தான் நாங்கள் பெரும் தவறு செய்து விட்டோம்.

கிரஹலட்சுமியை பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. பிரசாந்தின் குழந்தை கிரஹலட்சுமி யின் சூழ்நிலையில் வளர்ந்தால் எதிர்காலத்தில் அவன் வில்லனாகத் தான் வருவான். அதனால் என் பேரனை கிரஹலட்சுமியிடமிருந்து மீட்டு எங்கள் பொறுப்பில் வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.

வரதட்சணை தடுப்புச் சட்டம் 498ஏ,  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகியவை ஆண்களுக்கு எதிரான கொடுமை யான சட்டங்களாகும். இந்த சட்டங்களை தவறாக பயன் படுத்தி பிரசாந்த்தை கிரஹலட்சுமி கொடுமைப்படுத்தினார். இந்த சட்டப் பிரிவுகளை அரசு ரத்து செய்யவேண்டும். வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் ஆண்கள் என்னிடம் உதவியை நாடலாம்.

பிரசாந்த்தின் கடந்த 12 வருட சினிமா வாழ்க்கையில் எந்த கிசுகிசுக்கும் ஆளாகவில்லை. ஆனால் திருமண வாழ்க்கை சோதனையாக அமைந்து விட்டது. ஆரம்பத்தில் கிரஹலட்சுமியை பிரசாந்த் ஏமாற்றி விட்டதாக சிலர் நம்பினார்கள். ஆனால் பிரசாந்த்தான் ஏமாற்றப்பட்டார் என்பதை இப்போது தெரிந்து கொண்டிருப்பார்கள். இப்போது அவருக்கு நீதி கிடைத்து விட்டது. இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

| |

மற்றவை :