நவநாயக்கர் பலன்
விரோதி வருடத்திற்கு ராஜா- சுக்கிரன். மந்திரி- சந்திரன், சேனாதிபதி சந்திரன், அர்க்காதிபதி- சந்திரன், ஸஸ்யாதிபதி-குரு, தான்யாதிபதி- புதன், ரஸாதிபதி-சனி, நீரஸாதிபதி-குரு, மேகாதிபதி- சந்திரன் இந்த ஆண்டு தேவதை- உமா மஹேஸ்வரர், பசுநாயகர்-கோபாலன்.
இவற்றின்பலன் உலகில் போதிய அளவு மழை பெய்து விளைச்சல் திருப்தியாக இருக்கும். பயிர்வகைகள் செழிக்கும். அதே நேரத்தில்விலைவாசி உயர்வும் இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சியடையும். பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். ஆனால் தனிநபர் பொருளாதார வசதி எதிர்பார்த்த அளவு உயராது. தங்கம், வெள்ளி நவரத்தின கற்கள் விலை படிப்படியாக உயரும். வெளிநாட்டு நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலை இல்லாத தட்டுப்பாடு குறையும்.
கட்டுமான பொருட்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும். வீடு, மனை போன்றவற்றின் விலை குறையவும் செய்யாமல், உயரவும் செய்யாமல் நடுத்தரமாக இருக்கும். கடன் வசதி எதிர்பார்த்த அளவு கிடைப்பது கடினம். அரசியலில் திடீர் மாற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு குழப்பங்கள் ஏற்படும். காவல்துறை, ராணுவம் போன்வற்றில் இருப்பவர்களுக்கு பணிசுமை கூடும். அந்நிய நாட்டுடன் உறவுமுறை சுமூகமாக இருந்தாலும் எச்சரிக்கை தேவை. வாகன விபத்துகள் கூடும். பெண்களுக்கு மரியாதை அதிகரிக்கும். அவர்களுக்கு உயர்வும் கிடைக்கும்.
கலிவெண்பா
நீடு விரோதி நிலத்தின் மழை மிகுதி
மேடு காடெல்லாம் விளைவுண்டாம்- நீடும்
அரசர் போராலே யழிப்பு முலகம்
திரமிகு நோய் சேருமெனச் செப்பு.
என்பது இடைக்காடர் எழுதிய விரோதி வருஷத்திய பலன் வெண்பா. இதன் பலன் காடுமேடு எல்லாம் விளையும் அளவு மழை பொழியும். நாடுகளுக்குள் போர் அபாயம் ஏற்படும். அத்துடன் நோய் மிகுதியாகும் என்பதாகும்.
ஆதாயம், விரயம்
இந்த ஆண்டின் ஆதாயம் விரயம் எவ்வளவு என்று பார்த்தால் மேஷ விருச்சிக ராசியினருக்கு 2 ஆதாயம், 8 விரயமாகும். ரிஷபம், துலா ராசியினருக்கு 11 ஆதாயம் 14 விரயமாகும். மிதுனம், கன்னிராசியினருக்கு 14 ஆதாயம் 11 விரயமாகும். கடகராசியினருக்கு 14 ஆதாயம் 2 விரயமாகவும் தனுசு, மீன ராசியினருக்கு 5 ஆதாயம் 14 விரயமாகவும், மகரம், கும்ப ராசியினருக்கு 8 ஆதாயம் 8 விரயமாகவும் உள்ளது.
ஆதாயம் என்பது வரவு விரயம் என்பது செலவு என்று பொருள். மொத்தத்தில் 65 ஆதாயமும் 62 விரயமாகவும் வருவதால் நாட்டில் சேமிப்பு அதிகரிக்கும் என்று கூறலாம்.
கிரகணம்
இந்த ஆண்டு இரண்டு சூரிய கிரகணமும் ஒரு சந்திர கிரகணமும் ஏற்படுகின்றன. சூரிய கிரகணம் ஜூலை மாதம் 22-ந் தேதி (ஆடி மாதம் 6-ந் தேதி), காலை 5.30மணிக்கு தொடங்கி, 7.15 மணிக்கு முடிகிறது. மற்றொரு சூரிய கிரகணம் 15.1.2010 ( தை மாதம் 2-ந் தேதி) பகல் 11.20 மணிக்கு தொடங்கி மாலை 3.15 மணிக்கு முடிகிறது. சந்திரகிரகணம் 31.12.2009 (மார்கழி 16-ந்தேதி), இரவு 12.20-க்கு தொடங்கி, இரவு 1.25-க்கு முடிகிறது. கிரகணத்தின் பலன் நாட்டில் சாத்துக்கள் (சாமியார்கள்) பற்றிய தவறான கருத்துக்கள் உண்டாகும். ஆயுதம் ஏந்திய வீரர்களுக்கு அதனை பிரயோகிக்கும் நிலை ஏற்படும். பயிர் விளைச்சல் இருந்தாலும் விலை குறையாத நிலை உண்டாகும்.
மகர சங்கராந்தி தேவதை பலன்
மகர சங்கராந்தி தேவதை தை மாதம் 1-ந் தேதி (14.1.2010) வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு அமாவாசை திதி பூராட நட்சத்திரம் தனுர்ராசி வியாகாத யோகம் சதுஷ்பாத கரணம் சித்தயோகம் ரிஷப லக்னத்தில் மகர ராசியில் பிரவேசிக்கிறாள். ஸ்திரி புருஷரூபமாய் இரண்டு முகமும் 2 கண்களும், 4 வாயும், சிவப்பு தந்தமும் நீண்ட நாக்கும் தொங்குகின்ற புருவமும் நீண்ட காது எட்டுகைகளும், இரண்டு கால்களும் 12 யோஜனை பருமனும், 100 யோஜனை உயரமும் உள்ள கோர ரூபத்துடன் எருதுவாகனம் ஏறி மந்தாகினி என்ற பெயரில் வருகிறார்.
இதன் பலன் பயிர் விளைச்சல் அதிகரிக்கும். காய்கறி, பூ விலை உயரும். பொது மக்களுக்கு வீண் அலைச்சல், தேவையற்ற பயம் அதிக செலவு உண்டாகும்.
தமிழ் புத்தாண்டு (விரோதி) பொதுபலன்
விரோதி தமிழ் புத்தாண்டு 13.4.2009 திங்கள் கிழமை இரவு 11.05 மணிக்கு பிறக்கிறது. தனுசு லக்னத்தில் வருட பிறப்பு இருப்பதால் லக்னாதிபதி குரு பகவான் ஆவார். ஆண்டுதொடக்கத்தில் லக்னாதிபதி குரு லக்னத்துக்கு இரண்டாம் இடமான மகரத்தில் நீச்சம் பெற்று உள்ளதுடன் ராகுவின் சேர்க்கையும் பெற்றுள்ளார். இதன் பலன் இந்த ஆண்டு பொதுவான நோய் அதிகமாகும் நிலை உள்ளது.
இரண்டில் ராகு இருப்பதால் பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். லக்னாதிபதியான குரு தனக்காரகன் ஆகையால் பணபுழக்கம் எதிர்பார்த்த அளவு சரளமாக இருக்காது. பைனான்ஸ் இறுக்கி பிடிக்கும். பணம் இருப்பது போன்று தோன்றும். ஆனால் தேவையான நேரத்தில் இருக்காது. அவரே புத்திரகாரகனாகவும் இருப்பதால் சிறுவர்களுக்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு உண்டாகும்.
ஆனால் குருவின் பார்வை ருண, ரோக சத்ருஸ்தானத்தின் மீது விழுவதால் நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது.
எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். குருவின் பார்வை 7 ஆம் இடத்தில் பதிவதால் அங்கு சஞ்சாரம் செய்யும் போது குருவால் பார்க்கப்படுவதால் கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். தொழில் பார்ட்னர்களால் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.
அரசியலில் திடீர் மாற்றங்கள் உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.
சுக்கிரனும், செவ்வாயும் சேர்க்கை பெற்றிருப்பதாலும், 4- ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதும் வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.
கிரக பெயர்ச்சி குருபெயர்ச்சி:
வாக்கியபடி: 4.5.2009 திங்கள் கிழமை 5.2.05 நாழிகைக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசாரம் பெற்று சஞ்சரிக்கிறார். 3.8.2009 திங்கள் கிழமை 37.45 நாழிகைக்கு வக்ரகதியில் கும்பராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார்.
15-12-2009 செவ்வாய்க்கிழமை மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு 43.51 நாழிகையில் (இரவு 11.59-க்கு ) பெயர்ச்சி அடைகிறார் (நேர்கதி)
திருக்கணிதபடி: 1.5.2009 வெள்ளிக்கிழமை 31-55 நாழிகைக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிகாரமாக செல்கிறார்.
30-7-2009 வியாழக்கிழமை 34-35 நாழிகையில் வக்கிரமாக மகராசிக்கு பிரவேசிக்கிறார். 19-12-2009 சனிக்கிழமை 44-25 நாழிகைக்கு நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சனி பெயர்ச்சி:
வாக்கியபடி: 26.9.2009 சனிக்கிழமை 23.25 நாழிகைக்கு சிம்மராசியில் இருந்து சனி பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
திருக்கணிதப்படி: 9.9.2009 புதன்கிழமை 44.55 நாழிகைக்கு சனி பகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
ராகு கேது பெயர்ச்சி:
வாக்கியபடி: ஜப்பசி மாதம் 10-ந் தேதி (27.10.2009) செவ்வாய்கிழமை 7.41 நாழிகைக்கு ராகு பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கேது பகவான் கடகத்தில் இருந்து மிதுனராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
திருக்கணிதப்படி: கார்த்திகை மாதம் 1-ந் தேதி 17.11.2009 செவ்வாய் கிழமை 14.20 நாழிகைக்கு ராகு பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடகத்தில் இருந்து மிதுன ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)
எதையும் சாதிக்கும் ஆற்றலுடைய மேஷ ராசியினரே நீங்கள் காரணமில்லாமலேயே சினத்துக்கு ஆளாவீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளை தரும் ஆண்டாக அமையும். வருட தொடக்கத்தில் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு 12-ல் சுக்கிரனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வது சிறிது உடல் நலக்குறைவை கொடுத்தாலும், மனதில் மகிழ்ச்சியான எண்ணங்களை தரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
வருடத்தின் முதல் 5 மாதங்கள் வரை ராசியாதிபதி செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து சஞ்சாரம் செய்வதால் வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும்.
வருட ஆரம்பத்தில் அதிகாரம் பெற்று சஞ்சாரம் செய்யும் குரு மூன்று மாதங்கள் வரை ராசிக்கு 11-ல் இருப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மேலும் குருவின் பார்வையால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளை பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். டிசம்பர் மாதம் 15-ந் தேதி குருப்பெயர்ச்சிக்கு பிறகு தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை உள்ள காலகட்டத்தில் தொழில் மாற்றம் உத்தியோக மாற்றம் உண்டாகலாம். ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்யும் சனியால் பிள்ளைகள் மூலம் அடிக்கடி மனக்கவலை ஏற்படும். காதல் விவகாரங்களில் தகராறு உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். ஆனால் செப்டம்பர் மாதம் 26-ந் தேதி வரும் சனி பெயர்ச்சி உங்களுக்கு ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்க போகும் சனி பகவான் வழக்குகளில் சுமூக முடிவை தருவார். வெளிநாட்டிற்கு வேலை, கல்வி தொடர்பாக செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்யம் உண்டாகும்.
ராகு கேதுகளின் பெயர்ச்சி மனதில் தைரியத்தை தரும். நண்பர்கள் மற்றும் அன்னிய நபர்களால் உதவி கிடைக்க செய்யும். புதிய சொத்து வாங்கும் போதும் சொத்தை விற்கும் போதும் கவனம் தேவை. தாய், தந்தையிடமும், பெரியோரிடமும் அனுசரித்து நடந்து கொள்வதும் நன்மை தரும்.
இந்த ஆண்டு பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும் ஆண்டாக இருப்பதுடன் பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் தீரும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள். வாகனம் ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.
பரிகாரம்: திருத்தணி முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களை பெற்ற ரிஷபராசியினரே நீங்கள் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பூமி மூலமும், வீடு வாகனங்கள் மூலமும் லாபம் தரும் ஆண்டாக இருக்கும். ராசியாதிபதி சுக்கிரன் ராசிக்கு 11-ல் செவ்வாயுடன் இணைந்து சஞ்சாரம் செய்வது தடைபட்ட பணம் கைக்கு கிடைக்க வகை செய்யும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். முதல் 5 மாதங்கள் ராசியாதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பதகாத ஆசைகள் உண்டாகலாம்.
கவனமாக இருப்பது நல்லது. வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
இந்த வருடம் தொடக்கத்தில் ராசிக்கு 9-ல் சஞ்சாரம் செய்யும் குரு மே மாதம் 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் 3 வரை அதிகாரமாக/ ராசிக்கு 10-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. ஆகஸ்ட் 3 முதல் டிசம்பர் 15 வரை மீண்டும் ராசிக்கு 9-ல் சஞ்சரிக்கும் குரு எல்லா நற்பலன்களையும் தருவார். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். டிசம்பர் 15-க்கு பிறகு குரு ராசிக்கு 9-ல் இருந்து 10-க்கு பெயர்ச்சி அடைவதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படலாம்.
குரு பார்வையின் பலன் பணவரத்து அதிகரிக்க செய்யும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந் தேதி வரும் சனி பெயர்ச்சிக்கு பிறகு அர்த்தாஷ்டம சனியின் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். ஆனால் ராசிக்கு 5-ல் சனியின் சஞ்சாரம் இருப்பதால் பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
தற்போது ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் கேது, நண்பர்கள், அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகளை செய்வார். 9-ல் உள்ள ராகு நினைத்த காரியத்தை சாதிக்க எடுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகும். வரும் அக்டோபர் 27-ந் தேதி கேது ராசிக்கு மூன்றில் இருந்து இரண்டிற்கும் ராகு ராசிக்கு 9-ல் இருந்து 8- ஆம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள். இதனால் மனதில் வீண் பயத்தை உண்டாக்கும். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பாலி னத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் இந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்கள் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டு களில் ஈடுபடும் போது கவனம் தேவை.
பரிகாரம்: பவுர்ணமி அன்று பூஜை செய்வதும், லட்சுமி அஷ்டோத்ரம் படிப்பதும் பணசிக்கலை நீக்கும், வாழ்வு வளம் பெறும்.
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
வாக்குவாதத்தில் திறமையுடன் ஈடுபட்டு எதிரில் இருப்பவர்களை தன்வசப்படுத்தும் மிதுன ராசியினரே நீங்கள் அடுத்தவருக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். இந்த தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், ஆண்டு தொடக்கத்தில் ராசியாதிபதி புதன் சஞ்சாரம் சுக சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை சூரியன் தருவார்.
ராசிக்கு 7-க்கும், 10-க்கும் உடையவனான குரு மே மாதம் 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி வரை அதிகாரம் பெற்று ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பது தடைபட்ட பணம் கைக்கு வந்து சேர வழி செய்யும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். காரிய வெற்றி உண்டாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை மீண்டும் குரு அஷ்டமத்தியில் சஞ்சாரம் செய்வதால் பணதேவை அதிகரிக்கும். எல்லா காரியங்களும் தாமதப்படும்.
வேலைபளு வீண்அலைச்சல் உண்டாகும். டிசம்பர் 15-ந் தேதி முதல் குரு ராசிக்கு 9-ல் சஞ்சாரம் செய்வதால் ஆட்டிபடைத்த அஷ்டமகுருவிடம் விடுபடுவீர்கள். குருவின் பார்வையால் உடல் ஆரோக்யம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்கள் ஆலோசனை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். மனதில் உறுதி ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் சனி வரும் செப்டம்பர் 26-ந் தேதி வரை அங்கேயே சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபார போட்டிகள் நீங்கும். வியாபாரம் வளர்ச்சியடையும். வாகனங்கள் வாங்க அல்லது புதுப்பிக்க எடுக்கும் முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வை காண்பார்கள். ஆனால் செப்டம்பர் 26-ந் தேதி முதல் சனி ராசிக்கு 4 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைந்து அர்த்தாஷ்டம சனியாக இருப்பதால் எதிலும் மிகவும் கவனம் தேவை. இந்த ஆண்டின் கடைசி இரண்டரை மாதங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படலாம்.
செலவும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். தற்போது ராசிக்கு இரண்டில் சஞ்சரிக்கும் கேது மற்றவர்களிடம் கடுமையாக பேசும் படி செய்வார். வேளைக்கு சாப்பிட முடியாமல் போகும். ராசிக்கு 8-ல் உள்ள ராகு அடுத்தவர்களின் சூழ்ச்சியில் சிக்க நேரிடலாம். ஆனால் வரும் அக்டோபர் 27-ந் தேதி அன்று ஏற்படும் ராகுகேது பெயர்ச்சிக்கு பிறகு ஜென்ம ராசியில் கேது சஞ்சாரம் இருப்பதால் வீண்கவலையும், வேலை பளுவும் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போதும் தீ, ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. ராகுவின் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் உண்டாகலாம். கவனம் தேவை.
பெண்கள் இந்தஆண்டின் இறுதியில் சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தை கடைபிடிப்பது நன்மை தரும். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போதும், விளையாட்டின் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பரிகாரம்: பெருமாளையும், தாயாரையும் சனிக்கிழமையில் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது காரிய தடை நீங்கும். பணவரத்து பெருகும்.
கடகம்
(புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)
வாழ்க்கையில் எதையும் நன்கு அனுபவித்து ரசிக்கும் கடகராசியினரே நீங்கள் நிலையற்ற தன்மை கொண்டவர். இந்த தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பார்ட்னருடன் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து வியாபாரம் வளர்ச்சி பெறும்.
பூமிகாரக செவ்வாய் முதல் 5 மாதங்கள் சுக்கிரனுடன் சேர்ந்து செய்யும் சஞ்சாரம் பணவரத்தை அதிகரிக்கும். முன்னேற்றங்களை தரும். முயற்சிகள் சாதகமானபலன் பெறும். ஆனால் வாகனங்களில் செல்லும் போதும் எந்திரங்களை கையாளும் போதும் தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
வருட தொடக்கத்தில் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குரு அதிகாரம் பெற்று மே 4 தேதி முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை அஷ்டமத்தில் சஞ்சாரம் செய்வது திடீர் பணசிக்கலை ஏற்படுத்தும் பணம் இருந்தும் தேவையான நேரத்தில் கிடைக்காத நிலை உண்டாகும். வீண் அலைச்சல் திடீர் டென்ஷன் ஏற்படலாம். காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டுபின்னர் முடியும். உடல் பலவீனம் உண்டாகலாம். ஆகஸ்ட் 3-க்கு பிறகு டிசம்பர் 15 குருபெயர்ச்சி வரை ராசிக்கு 7-ல் சஞ்சாரம் செய்யும் குருவால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் சுகமும், நிம்மதியும் கிடைக்கும். குருபெயர்ச்சிக்கு பிறகு பதவி மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகலாம்.
குருபார்வையின் பலன் கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல்தவித்த இரவுகள் மாறி நிம்மதியான தூக்கம் வரும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். வருடத்தின் முதல் 6 மாதம் சனி ராசிக்கு இரண்டில் சஞ்சாரம் செய்து பேச்சில் கோபத்தையும், குடும்பத்தில் சிறு குழப்பங்களையும் ஏற்படுத்தி வருவார். ஏழரை சனியின் கடைசி இரண்டரை வருடகாலத்தின் முடியும் தருவாய் ஆதலால் இதுவரை இருந்து வந்த மனகஷ்டம், பணகஷ்டம் தீரும். 26.9.2009 அன்று சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்லும் சனியால் உங்களுக்கு யோகம் தான். ஏழரை சனியின் பிடியில் இருந்து முற்றிலும் விடுபடுவீர்கள். இந்த காலகட்டத்தில் சனி ராசிக்கு மூன்றில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்யம் உண்டாகும். வேலை தேடி அலைபவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். சிலருக்கு வசதியான வீடு அமையும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராசியில் சஞ்சரிக்கும் கேதுவும் 7-ல் சஞ்சரிக்கும் ராகுவும் உங்களுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருவார்கள். சாதாரணமான பேச்சே வீண் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை இருக்கும். நெருங்கிய நண்பர்களின் பிரிவும் ஏற்படலாம். வீண் கவலைகளும் உண்டாகலாம். ஆனால் இவையெல்லாம் அக்டோபர் 27-ந் தேதி வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சி வரையே. அதன் பிறகு எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுமுகமானநிலை உண்டாகும். எதிரிகள் தொல்லை குறையும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். எங்கும் எதிலும் நன்மையே உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு பெண்களுக்கு பல நன்மைகளை தரும் ஆண்டாக இருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கல காரியங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். வருட பிற்பகுதியில் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். போட்டி பந்தயங்களில் கவனம் தேவை.
பரிகாரம்: அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)
எவ்வளவு சிக்கலான ஒரு விஷயத்திலும் குழப்பம் இல்லாமல் சட்டென்று ஒரு முடிவு எடுக்கும் சிம்மராசியினரே இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு காரிய அனுகூலம் தரும் ஆண்டாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆண்டு தொடக்கத்தில் குருவின் சஞ்சாரம் அதிகாரம் பெற்று ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் மே மாதம் 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி வரை பல சிறப்பு பலன்கள் கிடைக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும் இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதிக்கு பிறகு டிசம்பர் 15-ந் தேதி வரை குரு மீண்டும் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பது திடீரென பணதேவையை ஏற்படுத்தும் புத்திரர்கள் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண்விவாதம் ஏற்படலாம் கவனம் தேவை.
டிசம்பர் 15-க்கு பிறகு குரு மீண்டும் கும்பத்தில் சஞ்சரிப்பதால் அதன்பிறகு தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்லநிலை உண்டாகும். பழைய பாக்கிகளும் வசூலாகும். வியாபாரம் தொடர்பான வெளிநாட்டு பயணம் உண்டாகலாம்.
குருபார்வையால் லாபம் அதிகரிக்கும் உடல் ஆரோக்யம் பெறும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும்.
ஜன்மராசியில் சஞ்சரிக்கும் சனி மற்றவர்களுடன் விரோதம், கவுரவ பங்கம் வீண் அலைச்சல் உடல் உழைப்பு ஆகியவற்றை கொடுத்துவரும். சூழ்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி வரும் சனி பெயர்ச்சியால் ஜன்ம சனி நீங்கும். ஏழரை ஆண்டின் கடைசி இரண்டரை ஆண்டாக இருப்பதால் மனக்கஷ்டம் குறையும். ஆனால் செலவு அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகலாம். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
இந்த ஆண்டு ராகுகேது பெயர்ச்சியும் இருப்பதால் சற்று கவனமாக இருப்பது நல்லது. தற்போது 6-ல் சஞ்சாரம் செய்யும் ராகுவும், ராசிக்கு 12-ல் சஞ்சாரம் செய்யும் கேதுவும் செல்வத்தை தருவார்கள். வேற்றுமொழி பேசுபவர்களின் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும். வரும் அக்டோபர் 27-ந் தேதிக்கு பிறகு வரும் ராகுகேது பெயர்ச்சி லாபத்தை தரும். வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அவர்களால் செலவு ஏற்படலாம்.
பெண்களுக்கு இந்த ஆண்டு முன்னேற்றங்களை தரும் ஆண்டாக இருக்கும். கன்னிபெண்களுக்கு திருமணம் கைகூடும். ஆனால் வீண் அலைச்சல் இருக்கும். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்குவதும் பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)
எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காணப்படும் கன்னிராசியினரே நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பின்னரே செய்வீர்கள். இந்த தமிழ்புத்தாண்டில் எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். திடீர் பணதேவை உண்டாகலாம். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.
வருட தொடக்கத்தில் ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்யும் குரு மே மாதம் 4-ந் தேதி முதல் அதிகாரம் பெற்று ராசிக்கு 6-ல் சஞ்சாரம் செய்கிறார். எனவே இடமாற்றம் உண்டாகலாம். வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் தகராறு உண்டாகலாம். எனவே கவனமாக பேசுவது நல்லது. முயற்சிகளில் தடை உண்டாகலாம். பொழுதுபோக்கு, கலை நிகழ்ச்சிகளில் மனம் செல்லாமல் ஏதாவது கவலை இருக்கும். குருவின் பார்வையால் தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வெளியூர் தகவல்கள் நல்ல தகவலாக வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வழக்கு விவகாரங்களை தள்ளிபோடுவது நல்லது.
ஆகஸ்ட் 3-ந் தேதி வரை அதிகாரமாக கும்பத்தில் சஞ்சரித்த குரு மீண்டும் வக்கிரகதியில் மகரத்தில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முக்கிய நபர்களின் நட்பு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மீண்டும் டிசம்பர் 15-ந் தேதி நேர்கதியில் கும்பராசியில் பெயர்ச்சியடையும் குருவால் காரியங்களில் தடை, தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்புகளையும் ஏற்காமல் இருப்பது நல்லது.
தற்போது ராசிக்கு 12-ல் சஞ்சாரம் செய்யும் சனியால் வீண் அலைச்சல் எப்போதும் மனசங்கடமும் இருக்கும். காரணம் ஏழரை ஆண்டு சனியின் முதல் இரண்டரை ஆண்டு நடைபெறுவதும் தான். வரும் செப்டம்பர் 26-ந் தேதி சனிபகவான் சிம்மராசியை விட்டு உங்கள் ஜென்மராசயின கன்னிராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜென்மசனி நடப்பதல் எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வீண்பகை வராமலும், உடல் ஆராக்யம் கெடாமலும் பார்த்துக் கொள்வது நல்லது. எதையும் ஒருமுறைக்குபலமுறை யோசித்து செய்வது வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். தற்போது 11-ல் சஞ்சரிக்கும் கேதுவும் 5-ல் சஞ்சரிக்கும் ராகுவாலும்,பணவரத்து திருப்திகரமாக இருப்பதுடன் செல்வாக்கும் உயரும். தாய்தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அக்டோபர் 27-ந் தேதி வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு நல்லபலன்கள் ஏற்படும். அதேநேரத்தில் விழிப்புடன் செயல்படுவது நன்மைதரும்.
பெண்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டில் இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். ஆன்மிக பயணங்கள் செல்லநேரிடும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் கவனமுடன் படிப்பது நல்லது. வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.
பரிகாரம்: பள்ளிகொண்ட பெருமாளை சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
நிர்வாக திறமையும் தெளிவான சிந்தனையும் கொண்ட துலாராசியினரே நீங்கள் எதையும் எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு நற்பலன் தரும் ஆண்டாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் ராசியாதிபதி ராசிக்கு 3 மற்றும் 7 ஆம் அதிபதியுடன் இணைந்து இருப்பது மனதில் மனதுணிவு அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் இருந்த மனவருத்தங்கள் குறையும். அதே நேரத்தில் எதிலும் அவசர முடிவு எடுக்க தோன்றும் முன்கோபம் உண்டாகலாம். எதையும் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
மே 4-ந் தேதி முதல் ராசிக்கு 4-ல் சஞ்சாரம் செய்யும் குரு அதிகாரமாக ராசிக்கு 5-ல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை சஞ்சரிப்பது வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமானபலன்தரும். புத்திரர்களுக்கு நன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை குறையும். புத்திசாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் டிசம்பர் 15 வரை வக்கிரகுருவாக மகரத்தில் சஞ்சாரம் செய்வது திடீர் பணதேவையை ஏற்படுத்தும் இடமாற்றம் ஏற்படலாம். உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. அடுத்தவர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. டிசம்பர் 15 குரு பெயர்ச்சிக்கு பிறகு மீண்டும் எதிலும் நன்மை உண்டாகும்.
ராசிக்கு 11-ல் சஞ்சாரம் செய்து பல நல்ல பலன்களை தரும் சனி பகவான் செப்டம்பர் 26-ந் தேதி சிம்மராசியில் இருந்து கன்னிராசிக்கு செல்கிறார். ராசிக்கு 12-ல் சஞ்சாரம் செய்வது ஏழரை சனியின் முதல் இரண்டரை ஆண்டு ஆகும். எனவே எதிலும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது. காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். எதிலும் சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். திடீர் செலவுகள் உண்டாகும். செய்யும் தொழிலில் பின்னடைவு ஏற்படலாம். வேலைபளு மேல் அதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதம் சனியால் சமூக அந்தஸ்து உயரும். எந்த ஒரு பணியையும் விரைவாகவும், லாபகரமாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்கள் ராசிக்கு தற்போது நான்கில் ராகுவும் பத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் உடல்நலக்கோளாறு உண்டாகலாம். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பயணங்களால் வீண் அலைச்சலும் இருக்கும்.
தேவையற்ற வழிகளில் வீண்செலவு உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு இருக்கும். வரும் அக்டோபர் 27-ந் தேதி நடக்கும் ராகுகேது பெயர்ச்சிக்கு பிறகு ராகுகேதுவால் எல்லா நல்ல பலனும் உண்டாகும். தனவரவும் மனோ தைரியமும் இருக்கும். எதிர்பாலினரிடத்தில் பழகும் போது கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் தவிர்ப்பதும் நன்மை தரும்.
பெண்களுக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் காரிய அனுகூலமும், பணவரத்தும் இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் வீண் அலைச்சல் வேலை பளுவால் உடல் சோர்வும் உண்டாகலாம். மாணவர்கள் படிப்பில் தடை ஏற்படாமல் இருக்க மிகவும் நன்கு படிப்பது நல்லது. நண்பர்களுடன் நிதானமாக பழகுவதும் நன்மை தரும்.
பரிகாரம்: குல தெய்வத்தை பூஜைபோட்டு வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)
ஆன்மிக சிந்தனை மிக்கவர்களான விருச்சிக ராசியினரே நீங்கள் துணிச்சலாக எதையும் செய்வீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு தொடக்கத்தில் வீண்செலவு காரிய தடையை தந்தாலும் ஆண்டின் பிற்பகுதியில் இந்தநிலை மாறி செல்வ சேர்க்கையும் எதிலும் வெற்றியும் கிடைக்கும். ராசியாதிபதி செவ்வாய் ஆண்டின் முதல் 5 மாதம் சுக்கிரனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் எதிலும் வேகம் காட்டுவீர்கள். உல்லாச பயணம் செல்ல நேரிடும். எதிர்பாலினத்தவரிடம் அளவுடன் பழகுவது நல்லது.
ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு மூன்றில் சஞ்சரிக்கும் குரு மே மாதம் 4-ந் தேதி முதல் ராசிக்கு 4-ல் அதிகாரம் பெற்று சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். வியாபாரம் தொடர்பான செலவும் இருக்கும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். ஆகஸ்ட் 3-ந் தேதி மீண்டும் குருவக்கிரமடைந்து ராசிக்கு மூன்றில் சஞ்சாரம் செய்வதால் நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம்.
இடமாற்றம் ஏற்படும். டிசம்பர் 15-ந்தேதி குருபெயர்ச்சிக்கு பிறகு சற்று எச்சரிக்கையுடன் எதையும் செய்வது நன்மைதரும். ஆனால் குருவின் பார்வையால் தொழில் வியாபாரத்தில் முழு கவனத்துடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்யம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அடுத்தவர்களுக்காக விட்டு கொடுத்து செல்வீர்கள்.
தற்போது சனியின் சஞ்சாரம் ராசிக்கு 10-ல் இருப்பதால் உத்தியோகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மனதில் ஏதேனும் கவலை இருக்கும். உடல் உழைப்பு அதிகமாகும். ஆனால் செப்டம்பர் 26-ந் தேதி வரும் சனி பெயர்ச்சிக்கு பிறகு ராசிக்கு 11-ல் சஞ்சரிக்கும் சனி பகவானால் புதுதெம்பும் உற்சாகமும் உண்டாகும். புதிய பதவி தேடிவரும். பண கஷ்டம் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இந்த இரண்டரை ஆண்டு காலம் யோகமான பலன்கள் நடைபெறும். எதிர்ப்புகள் விலகும் தொழில் வியாபார போட்டிகள் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
தற்போது உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் ராகுவும், 9-ல் சஞ்சரிக்கும் கேதுவும் பலநன்மைகளை தருவார்கள். சகோதர வழியில் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். மற்றவர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது நல்லது. அக்டோபர் 27-ந் தேதி வரும் ராகுகேது பெயர்ச்சிக்கு பிறகு திடீர் கோபம் உண்டாகலாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை தரும். வாழ்க்கைதுணை அனுகூலமாக இருப்பார்கள்.
பெண்களுக்கு இந்த புத்தாண்டு சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளின் போதும் வாகனத்தில் செல்லும் போதும் கவனமாக இருப்பது நல்லது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்திதரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
தன்னடக்கம் மிகுந்த தனுசு ராசியினரே நீங்கள் எதையும் மறைத்து பேசமாட்டீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பணவரத்து அதிகரிக்க செய்யும். ஆனால் அதே நேரத்தில் ஓயாத வேலையும் அலைச்சலும் இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உத்தியோக மாற்றம் உண்டாகலாம். வருடத்தின் பிற்பகுதியில் செலவு அதிகரிக்கும்.
ராசியாதிபதி குரு ராசிக்கு இரண்டில் இருக்கும் பொழுது வருடம் பிறந்தாலும் மே மாதம் 4-ந் தேதி முதல் உங்கள் ராசியாதிபதி குரு ராசிக்கு மூன்றில் அதிகாரம் பெற்று சஞ்சாரம் செய்வதால் உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் நண்பர்கள் உங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் உங்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடும். திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய வேண்டி இருக்கலாம். குரு ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் வக்ரநிலைபெற்று மீண்டும் ராசிக்கு இரண்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரத்து கூடும். தொழில் வியாபாரத்தில் நிலுவையில் உள்ளபாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு குரு கும்பராசிக்கு பெயர்ச்சி அடைவதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. குருபார்வையால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வரும் லாபம் தடைபடாது.
உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிக்கும் சனியால் இப்போது பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்திற்கு தடைதாமதம் வந்தாலும் வரும் செப்டம்பர் 26-ல் வரும் சனிபெயர்ச்சிக்கு பிறகு அவை வந்து சேரும். ஆனால் பத்தாமிட சனியால் தொழில், வியாபாரம் திட்டமிட்டபடி விரிவாக்கம் செய்வது சிரமமாக இருக்கும். அதிக உழைப்பும், குறைந்த வருவாயும் கிடைக்கும். நல்லது கெட்டுத நிர்ணயிப்பதில் தடுமாற்றம் உண்டாகும். சிலருக்கு குடும்பத்தை விட்டு உத்தியோக நிமித்தமாக வெளியில் சென்று தங்க நேரிடும். வீண்விவகாரங்களில் தலையிடாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
தற்போது ராசிக்கு 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் அடிக்கடி கோபமாக பேசநேரிடும். சில காரியங்கள் சரிவர முடியாமல் போக பேச்சே ஒரு காரணமாகிவிடக்கூடும். அன்னியர் மூலம் செலவும் உண்டாகும். சொத்துகள் வாங்குவதில் வில்லங்கம் ஏற்படலாம். ஆனால் வரும் அக்டோபர் 27-ந் தேதி ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. ஜென்ம ராகுவும் 7-ல் கேதுவும் ஏதாவது கஷ்டத்தை தருவார்கள். மனைவியின் உடல்நிலையில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாலினரோடு மிகவும் கவனமாக பழகுவது நல்லது, சுறுசுறுப்பு குறைந்து சோர்வு உண்டாகலாம். எனவே வீண்அலைச்சலை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணபற்றாக்குறை ஏற்படலாம். சேமித்து வைப்பது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாக படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.
பரிகாரம்: ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 ம் பாதம் திருவோணம் அவிட்டம் 1,2 பாதம்)
தோற்றத்தில் நலிந்தவர் போல் காணப்பட்டாலும் உள்ளூர உடல்வலிமையும் உள்ள உறுதியும் பெற்ற மகர ராசியினரே இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பொருள் சேர்க்கையும் உடல் ஆரோக்கியத்தையும் தரும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் கட்டுக்குள் இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். ஆண்டு தொடக்கத்தில் ஜன்மராசியில் அமர்ந்து காரியதடைகளையும் அலைச்சலையும் அடுத்தவரிடம் அவப்பெயரும் தந்தகுரு வரும் மே 4-ந் தேதி முதல் அதிகாரம் பெற்று கும்பராசியில் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பது பலவகையிலும் உங்களுக்கு நன்மைதரும். தொழில் வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். பிள்ளைகளுடன் வெளியில் சென்று மனதுக்கு பிடித்தபடி பொழுதை கழிப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.
ஆகஸ்ட் 4-ந் தேதிகுரு வக்கிரம் பெற்று மீண்டும் ஜென்மராசியில் சஞ்சரிக்க தொடங்குவதால் அது முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை மீண்டும் ஒரு சில பிரச்சனைகள் தலைதூக்கலாம் எனவே எதிலும் நிதானமாக போக்கை கடைபிடிப்பது நன்மை தரும். இருக்கும் இடம்விட்டு வேறு இடம் செல்ல நேரலாம். செய்த வேலைக்கு உரிய கூலி கிடைப்பது இழிபறியாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதை தளரவிடாமல் இருப்பது நல்லது. டிசம்பர் 15-க்கு பிறகு மீண்டும் குரு 2-ம் இடத்தில் சஞ்சரிக்க தொடங்குவது உங்களுக்கு எல்லா தொல்லையும் நீங்கி நன்மை ஏற்படும்.
தற்போது ராசிக்கு 8-ல் அமர்ந்து அஷ்டமசனியாக இருக்கும் உங்கள் ராசியாதிபதி சனி மற்ற ராசிக்காரர்களை விட உங்களை குறைவாகவே ஆட்சி படைப்பார். வீண்செலவுகளையும், மனசஞ்சலங்களையும், உடல் உழைப்பையும் தரும் சனிபகவான் காரிய தடைகளையும் ஏற்படுத்தி வருவார். அஷ்டமசனியால் அவதிப்படுகிறோமே என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படலாம். இவைஎல்லாம் வரும் செப்டம்பர் 26-ந் தேதி வரைதான் அன்று உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து 9- ஆம் இடத்திற்கு செல்லும் சனி ராஜயோகத்தை தருவார் என்றே சொல்ல வேண்டும் தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்லமுறையில் நடக்கும். முயற்சிகள் கைகூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய வேலை ஆட்கள் கிடைப்பார்கள். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும்.
தற்போது ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும், 7-ல் சஞ்சரிக்கும் கேதுவும் ஏதேனும் வீண் பிரச்சனைகளை தருவார்கள். காரணம் கண்டுபிடிக்க முடியாத கவலைகளையும் குடும்பத்தில் குழப்பம் கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை போன்றவற்றை கொடுத்து வந்தாலும் இவைஎல்லாம் வரும் அக்டோபர் 27-ந் தேதிவரைதான். அன்று வரும் ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு இந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். அதன்பிறகு 12-ல் சஞ்சாரம் செய்யும் ராகுவும் 6-ல் கேதுவும் எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி விடுவார்கள். வாக்கு வன்மை அதிகரிக்கும். உடன் பிறப்புகளிடம் கவனமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு இந்த ஆண்டு காரிய அனுகூலம் தருவதுடன் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்க செய்யும். பணபுழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் காண்பார்கள். படிக்கும் போதே சிலருக்கு வேலை கிடைக்கலாம்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
ஒரு பார்வையிலேயே மற்றவரை எடைபோடும் திறமை உள்ள கும்பராசியினரே, நீங்கள் எடுத்த காரியத்தில் எந்த தடை வந்தாலும் பின்வாங்க மாட்டீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு முன்னேற்றங்களை தரும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
ராசிக்கு 12-ல் சஞ்சாரம் செய்யும் குருவால் இப்போது பணவரத்து குறையலாம். வாகனம், வீடு மூலம் செலவுகளும் அவ்வப்போது ஏற்படலாம். எதையும் செய்யும் முன் தயக்கம் உண்டாகலாம். வரும் மே 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை குரு அதிசாரமாக உங்கள் ஜென்மராசியில் சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல், காரியதாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. சரக்குகளை அனுப்பும் போதும் சேமித்து வைக்கும் போதும் கவனமாக இருப்பது நன்மை தரும். ஆகஸ்ட் 3 முதல் டிசம்பர் 15 வரை வக்கிரம் அடையும் குரு மீண்டும் ராசிக்கு 12-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரத்து குறையலாம். பிள்ளைகள் உடல்நிலையில் கவனம் தேவை. டிசம்பர் 15-க்கு ஜென்மராசியில் குருவின் சஞ்சாரம் இருப்பதால் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது.
குரு பார்வையின் பலனால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூரியம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எழுத்து துறையில் இருப்பவர்கள் திறமை வெளிப்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
தற்போது உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சாரம் செய்யும் சனி கண்டசனியாக இருந்து மனதில் அவ்வப்போது ஏதாவது கவலையை ஏற்படுத்தி வருவார். வீண் அலைச்சல் வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமை என்று ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வந்து மனசோர்வை உண்டாக்கும். வரும் செப்டம்பர் 26-ல் ஏற்படும் சனிபெயர்ச்சிக்கு பிறகு அஷ்டமசனியாக உலாவருவதால் மிகவும் எச்சரிக்கையுடன் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பம், பணதட்டுப்பாடு போன்றவை ஏற்படலாம். எனவே எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது.
ராசிக்கு 12-ல் ராகுவும் 6-ல் கேதுவும் சஞ்சரிப்பது உங்களுக்கு பல ஆறுதலான விஷயங்களை தரும். எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் இருக்காது. தொழில் போட்டி இருக்காது. வரும் அக்டோபர் 27-ந் தேதி ராகு, கேது பெயர்ச்சி வருவதால் அதன் பிறகு ராசிக்கு 11-ல் ராகுவும் 5-ல் கேதுவும் சஞ்சாரம் செய்வது எதுவும் லாபமாக நடக்கும். மனதுக்கு பிடித்தபடி ருசியான சாப்பாடு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் பல நன்மைகள் நடக்கும். ஆண்டின் பிற்பகுதியில் வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
எந்த ஒரு பிரச்சனைகளையும் சமாதானமாக பேசி முடிக்கும் சாமர்த்தியம் மிகுந்த மீனராசியினரே நீங்கள் அனுபவஅறிவு மிக்கவர். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை தருவதுடன் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் தரும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் ராசியாதிபதி குரு தற்போது ராசிக்கு 11-ல் இருந்து பல லாபங்களை தருகிறார். அத்துடன் பணவரத்தும் திருப்திதருவதாக உள்ளது. வரும் மே 4-ந் தேதி முதல் ராசியாதிபதி குரு அதிசாரமாக ராசிக்கு 12-ல் சஞ்சாரம் செய்வதால் ஆகஸ்ட் 3 வரை வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்க தாமதம் ஏற்படலாம். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். ஆனால் ஆகஸ்ட் 3-க்கு பிறகு குருவக்கிரமாக மீண்டும் 11-ல் இடத்தில் சஞ்சாரம் செய்வது எதையும் செய்து முடிக்கும் நிலையை உருவாக்கும். டிசம்பர் 15-ல் வரும் குருபெயர்ச்சிக்கு பிறகு பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம்.
பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குருவின் பார்வையால் புதிய வீடு கட்டும் பணி அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும். வாகனங்களை மாற்றும் எண்ணம் தோன்றும் சுக அனுபவம் உண்டாகும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். வழக்குகளில் சாதகமான பலன் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபார போட்டிகள் விலகும். மற்றவர்களால் ஏற்பட்ட பழிசொல் நீங்கும்.
உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும் சனி பொன்னும், பொருளும் தருவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெயரும், புகழும் கிடைக்கும். உங்களது திறமையான செயல்களுக்கு பாராட்டுகளும் கிடைக்கலாம். வரும் செப்டம்பர் 26-ந் தேதி சனி சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ந்து உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். 7-ல் சனி சஞ்சாரம் செய்வது கண்டசனி எனப்படும்.
இந்த சனியால் உங்களது சேமிப்பு குறையலாம். விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பணியாட்களால் பொருள் நஷ்டம் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
தற்போது ராசிக்கு 11-ல் சஞ்சரிக்கும் ராகுவும் 5-ல் சஞ்சரிக்கும் கேதுவும் பல நன்மைகளை செய்து வருவார்கள். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். பணவரத்து பலவழிகளிலும் இருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனைவியின் உடல்நிலையில் கவனம் தேவை. அக்டோபர் 27-ல் வரும் ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு 10-ல் ராகுவும் 4-ல் கேதுவும் சஞ்சாரம் செய்வது பல்வேறு வகையிலும் புகழ் உண்டாகும். சொத்துக்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.
பெண்களுக்கு இந்த ஆண்டு பணவரத்தை அதிகப்படுத்தும், விருந்து, சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். மன மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். சக மாணவர்கள் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.