சென்னை, ஏப். 8: சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘அசல்’ பட பூஜை இன்று சிவாஜி கணேசனின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர்கள் ரஜினிகாந்த்,அஜீத், சூர்யா, கார்த்திக் மற்றும் பல கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். சந்திரமுகியை தொடர்ந்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் ‘அசல்’ என்ற படத்தை தயாரிக்கிறது. நடிகர் அஜீத்குமார் கதாநாயகனாக நடிக்க, சரண் இந்த படத்தை இயக்குகிறார். |
இந்த படத்தின் துவக்க விழா இன்று காலை தெற்கு போக் சாலையில் உள்ள சிவாஜி கணேசனின் இல்லமான அன்னை இல்லத்தில் நடைபெற்றது. இயக்குனர் கே.பாலச்சந்தர் முதல் கிளாப்பை அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் சௌந்தர்யாவுடன் கலந்து கொண்டார்.
நடிகர் அஜீத், மனைவி ஷாலினியுடன் விழாவுக்கு வந்தார். படபூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தி பேசியதாவது:- என் மகளை இன்று அழைத்து வரும் போது, ஒரு முக்கியமான இடத்திற்கு செல்லப்போகிறோம் என்று கூறி அழைத்து வந்தேன். முதல் முறையாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் வீட்டிற்கு உன்னை அழைத்து செல்கிறேன் என்று அவளிடம் கூறினேன்.
நான் நடித்த பாபா படம் தோல்வி அடைந்த போது, என்னைவிட பிரபுவும், ராம்குமாரும் வருத்தமாக இருந்தார்கள். இதே இல்லத்தில் சந்திரமுகி என்ற படத்தின் துவக்க விழா நடைபெற்றது. அப்போது சிவாஜியின் மனைவி கமலாம்மாள் உயிரோடு இருந்தார். இப்போது அவர் இல்லை.
இங்கு துவக்கிவைக்கப்பட்ட சந்திரமுகி திரைப்படம் ஒரு சரித்திரம் படைத்தது. அதே போல அஜீத் நடிக்கும் ‘அசல்’ படமும் ஒரு சரித்திரத்தை படைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிவாஜியின் இல்லம் தென்னக சினிமாவுக்கு தாய்வீடு. இவ்வாறு ரஜினி பேசினார். இந்த படம் வெற்றி பெற இயக்குனர் பாலச்சந்தர் வாழ்த்து தெரிவித்தார்.
இது ‘அசல்’ ‘தல’(அஜீத்)படம். இது அசல், கமர்ஷியல் படம் என்று இப்படத்தின் இயக்குனர் சரண் குறிப்பிட்டார். விழாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏவி.எம். சரவணன், குகன், ஆனந்தா சுரேஷ், நடிகர்கள் சூர்யா, கார்த்திக், இசையமைப்பாளர் பரத்வாஜ், எடிட்டர் சரண் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ரசிகர்கள் முற்றுகை சூப்பர் ஸ்டார் ரஜினி, அல்டிமேட் ஸ்டார் அஜீத் மற்றும் சூர்யா, கார்த்திக் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள வந்ததால் சிவாஜி வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தார்கள். காத்திருந்த ரசிகர்களை பார்ப்பதற்காக நடிகர் அஜீத் வெளியே வந்த போது கூட்டம் முந்தியடித்து கொண்டு வீட்டிற்குள்ளேயே புகுந்து விட்டது. போலீசார் மிகவும் சிரமப்பட்டு அவர்களை கட்டுப்படுத்தினார்கள். |