ஒவ்வொரு இயக்குனருக்கும் என்று தனித்துவமான காட்சி அமைப்பு பாணி உண்டு என்று கூறும் இவர், இந்த படம் முழுவதும் வித்தியாசமான காட்சி அமைப்புகள் கொண்டதாக இருக்கும் என்கிறார். அதனால்தான் திரைக்கதை, ஷாட் டைரக்ஷன் என்று தனது பெயருக்கு முன்னாள் குறிப்பிட்டு கொள்கிறார்.
பரணி மினரல்ஸ் பட நிறுவனம் சார்பில் டி.பாஸ்கர்ராவ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தில் பொல்லாதவன், வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட படங்களில் நடித்த கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அவரோடு சத்யன், ஸ்மிதா நடிக்க லால், பிஜுமேனன், சம்பத், சந்தான பாரதி, ராஜேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தி நடிகர் டினு ஆனந்த் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
போர்க்களம் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும். ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் அனைவரையும் எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவதே படத்தின் கதை என்று கூறுகிறார் இயக்குனர் பண்டி சரோஜ்குமார். தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை ஹாலிவுட் பாணியில் படம் அசத்தலாக இருக்கும் என்கிறார் இவர். யுவன் சங்கர் ராஜா இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கும்.
20 வயதில் தான் இயக்கிய குறும்படம் ஒன்றே தனக்கு விசிட்டிங் கார்டாக இருந்தது என்று கூறும் சரோஜ்குமார், போர்க்களம் படம் தனக்கு சரியான அறிமுகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
காரைக்குடி, திருச்செந்தூர், தென்காசி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, சென்னை, பாண்டிச்சேரி, பாங்காங் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வர உள்ளது. |