எடிட்டர் மோகனின் மகனான இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம்தூம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பேராண்மை படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவிக்கு வரும் ஜூன் 7-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணம் என்று ஜெயம் ரவி மகிழ்ச்சியோடு கூறுகிறார்.
சின்னத்திரை மற்றும் சினிமா தயாரிப்பாளர்களான விஜயகுமார், சுஜாதா விஜயகுமார் தம்பதிகளின் மகளான ஆர்த்தியை அவர் மணக்கிறார். மணப்பெண் ஆர்த்தி பிசிஏ முடித்து விட்டு தற்போது சர்வதேச நிர்வாகத்தில் முதுகலை படிப்பு படித்து வருகிறார். சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
மணப்பெண் ஆர்த்தி பற்றி நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது:- ஒரு சிலரை நாம் அடிக்கடி சந்தித்தாலும் அவர்கள் நம் வாழ்க்கையில் வரப் போகிறவர்கள் என்பது தெரியாமலே இருக்கும். அதுபோலத்தான் ஆர்த்தியும்.
இவரது குடும்பத்தினரை அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தாலும் கல்யாணம் பற்றி எண்ணம் இல்லாமல் இருந்தது. அப்போது திடீரென இரண்டு குடும்பமும் பேசி எங்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆர்த்தி எங்க வீட்டுக்கு மருமகளாக வருவது மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு கூறும் ஜெயம் ரவி, தற்போது நடித்து வரும் ‘பேராண்மை’ படத்தில் வனத்துறை அதிகாரி பாத்திரத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருவதாக தெரிவிக்கிறார். இந்தப் படத்திற்காக உடல் எடையை குறைத்ததாக கூறும் அவர், படத்தில் புதிய விஷயங்களை முயற்சித்திருப்பதாகவும் கூறுகிறார். |