சென்னை, பிப். 18: பன்முக திறமை கொண்ட இயக்குனர் கங்கை அமரனின் படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு வெங்கட்பிரபு என்று இயக்குனர் பாலசந்தர், கவிஞர் வாலி குறிப்பிட்டனர். சென்னை-28, சரோஜாவை தொடர்ந்து அவர் கோவாவில் ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். |
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ‘சரோஜா’ படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், வாலிப கவிஞர் வாலி, இயக்குனர்கள் கே. ரவிக்குமார், தரணி, ராஜா, நடிகர்கள் சிலம்பரசன்,ஸ்ரீகாந்த், சூர்யா, நடிகை சினேகா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு, சரோஜா படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டுதலை தெரிவித்தனர்.
இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிய கவிஞர் வாலி, இயக்குனர் கே.பாலச்சந்தர் பேசும் போது, இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர், பாடகர் என்று பன்முக திறமை கொண்ட கங்கை அமரன், திரை உலகிற்கு மிகச்சிறந்த படைப்புகளை கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு இயக்குனர் வெங்கட் பிரபு. சினிமாவை எவ்வளவு தூரம் வேறுபட்டு காட்ட முடியுமோ அந்த அளவுக்கு சென்னை- 28, சரோஜா படங்களை வெங்கட்பிரபு கொடுத்துள்ளார்.
தயாரிப்பாளர் டி.சிவா, வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கொண்ட இந்த மூவர் கூட்டணி தொடர்ந்து ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என்று கூறினர். |