Maalaisudar 
 
 
 
 
 
 
.
ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கார் வெல்வார்
 
.
Friday, 23 January, 2009 04:11 PM
.
சென்னை, ஜன. 23: ஆஸ்கார் விருதை  பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வாங்குவார் என்று  தமிழ் திரையுலகின் நடிகர்,நடிகைகள், பிரபலங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
.
உலக அளவில் சினிமாத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதாக ஆஸ்கார் விருது கருதப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ஹாலிவுட்டில் இந்த விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

75 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க இந்திய சினிமாவில் ஆஸ்கார் விருது என்பது கனவாகவே இருந்து வந்தது.  ஆஸ்கார் கமிட்டியின் கவுரவவிருதாக வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேவுக்கு வழங்கப்பட்டதே இந்தியா பெற்ற ஆஸ்கார் விருதாகும்.

நேரடி படங்களுக்கு கிடைக்காமல் ஒருவரை பாராட்டி வழங்கப்பட்ட விருது என்ற அடிப்படையில் அதனை ஆஸ்கார் விருதாக  சினிமா ஆர்வலர்கள்  கருதுவதில்லை.
தமிழ் திரையுலகில் கமலஹாசன், இந்தியில் அமீர்கான், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் தங்களது ஒவ்வொரு படைப்புகள் வெளிவரும் போதும் ஆஸ்கார் விருதை இலக்காக கொண்டே படத்தை எடுத்திருப்பதாக கூறுவது வழக்கம்.

ஆனால் சத்தமே இல்லாமல் கோல்டன் குளோப் விருதையும் தட்டிக் கொண்டு ஆஸ்காரின் கதவுகளையும் திறந்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இந்தியாவில் தயாரான ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில  படம் சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர் உள்பட 10 ஆஸ்கார் விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவரது பெயர் சிறந்த இசையமைப்பாளர் என்ற வகையிலும், சிறந்த பாடல் இசையமைப்பாளர் என்ற முறையில் 2 பாடல்களுக்கும் என மொத்தம் 3 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ஹோ என்ற ஒரு பாடல் குல்சார் எழுதியது, ஓ சாயா என்ற பாடல் மாயா அருள்பிரகாசம் எழுதியது.  ஆஸ்கார் வரலாற்றில் இந்திய கலைஞர் ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாது ஸ்லம்டாக் மில்லியனர் சிறந்த படம், சிறந்த இயக்குனர்டேனி பாயல், திரைக் கதை சைமன் பியூபாய், ஒளிப்பதிவு அந்தோணி டாட்மேன்டில், படத்தொகுப்பு கிறிஸ்டி கின்ஸ், ஒலிப்பதிவுதாமஸ், ஒலிச்சேர்க்கை இயான்டாக், ரிச்சர்டு,   ரெசூல் ஆகிய பிரிவுகளிலும் ஆஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு தனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.  கிடைக்காவிட்டால் ஆதங்கப்பட மாட்டேன் என்றார்.

ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் ஆஸ்காருக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பது குறித்து நடிகர், நடிகைகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:

த்ரிஷா: எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். நிச்சயம் அவர்  ஆஸ்கார் விருதை தட்டி வருவார் என்று நம்புகிறேன்.  பிப்ரவரி 22ந் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

பிரகாஷ்ராஜ்:
தகுதிவாய்ந்த கலைஞனுக்கு உரிய தகுதிகள் தானே தேடிவரும்.  அந்தவகையில் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற முழுத்தகுதியானவர். இந்திய திரை மற்றும்இசை வடிவங்களில் முகவரியாக உலக அரங்கில் ஏ.ஆர். ரஹ்மான் அறியப்படுகிறார்.

ஸ்ரீகாந்த் தேவா: ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது கிடைப்பது நிச்சயம். நாளை உலகஅரங்குகளில் நானும்  ஒரு இந்திய இசையமைப்பாளர், ரஹ்மான் நாட்டிலிருந்து வருகிறேன் என்று பெருமையுடன் கூறுவேன்.

விஷால்: இந்திய படங்கள் ஹாலிவுட் தரத்துக்கு இணையாக எடுக்கப்பட்டு வரும் இந்தவேளையில், ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது கிடைப்பது நமது  கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும்.

அமீர்: "பருத்தி வீரன்' படம் சிறந்த படமாக  பெர்லின் பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அங்கு சென்றிருந்த போது இந்தியாவில் அவர்களுக்கு மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் என்ற இரண்டு பெயர்கள் மட்டுமே தெரிந்திருந்தது.  அந்தவகையில்  ஆஸ்கார் விருதுக்கு முன்பாகவே ஏ.ஆர். ரஹ்மான் வெளிநாடுகளில் புகழ் பெற்றவர். எனவே அவருக்கு விருது கிடைப்பது நிச்சயம்.

யுவன் ஷங்கர் ராஜா: இந்திய இசைக்கு கிடைத்த உலக அங்கீகாரம் என்று சந்தோஷப்படுவேன்.

ராமநாராயணன்: 75 ஆண்டுகால  தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தமிழ் கலைஞர் இத்தகைய சாதனையை புரியப்போகிறார் என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
| |

மற்றவை :