சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அஞ்சாதே படம் மூலம் அனைவரையும் கவர்ந்த மிஷ்கினின் 3வது படைப்பாக உருவாகி வருகிறது நந்தலாலா. கதாநாயகர்களின் பின்னால் தமிழ் சினிமா ஓடிக்கொண்டிருக்கையில், 10 வயது சிறுவனை கதையின் நாயகனாக்கி படம் எடுத்து கொண்டிருக்கிறார் மிஷ்கின்.
மனித உணர்வுகளை திரையில் பிரதிபலிப்பதுதான் உண்மையான உலக சினிமா என்ற சித்தாந்தத்தோடு படம் எடுத்து வரும் மிஷ்கினை பொங்கல் மலருக்காக பேட்டி கண்டோம். மிஷ்கின் கூறியவை வருமாறு:
சித்திரம்பேசுதடி படத்தை எடுத்தபிறகு நந்தலாலா கதையைத்தான் படமாக எடுக்க நினைத்தேன். ஆனால் இந்த கதையை கேட்ட முன்னணி நடிகர்கள் அனைவரும் நடிக்க மறுத்துவிட்டனர். அந்த கோபத்தில்தான் ரத்தமும், கோபமுமாக அஞ்சாதே என்ற கதையை எழுதினேன். அந்த படம் பெரும் வெற்றி பெற்றது. அதற்கு பிறகும் கூட முன்னணி நடிகர்கள் நந்தலாலாவில் நடிக்க தயங்கி போது, நடிகர்களுக்காக கதை கிடையாது, கதைக்காகத்தான் நடிகர்கள் என்ற அடிப்படையில் நானே நடிக்கத் துவங்கி விட்டேன்.
கோடை விடுமுறையில் தன் தாயை தேடி அலையும் 8 வயது சிறுவனுடைய தேடல்தான் இந்த படம். இதில் மனவளர்ச்சியற்ற ஒரு நடுத்தர வயது வாலிபர் வேடத்தில் நான் நடித்துள்ளேன்.
முக்கிய வேடத்தில் ஸ்னிக்தா, ரோகிணி, நாசர் நடித்துள்ளனர். முதல் முறையாக என்னுடைய படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு கதை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு இசையும் முக்கியம் என்று திட்டமிட்டதாலேயே இளையராஜாவை அணுகினோம். அவரும் மிக அருமையான பாடல் மற்றும் பின்னணி இசையை உருவாக்கியிருக்கிறார்.
இதற்காக ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த புதாபெஸ்ட் ஆர்கெஸ்ட்ரா இசைக்கலைஞர்கள் வரவழைக் கப்பட்டு இசைக்கோர்வைகள் உருவாக்கப்பட்டது. அதேபோன்று நரிக்குறவ பெண்மணியான சரோஜா அம்மாள் என்பவர் தானே உடுக்கை அடித்து பாடும் எலிலே எலிலே என்ற பாடலை பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையராஜா இசையில் ஜேசுதாஸ் ஒரு பாடலை பாடியுள்ளார்.
தொழில்நுட்பத்தை எடுத்து கொண்டால் நந்தலாலா படத்தில்தான் முதல் முறையாக மிக நீண்ட குளோசப் காட்சிகளை வைத்துள்ளோம். அதேபோன்று புதிய முயற்சியாக கிளைமேக்ஸ் காட்சிகள் நீண்ட நேரத்திற்கு ஸ்லோமோஷனில் (48 பிரேம்கள்) எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படப்பிடிப்பு தளத்திலேயே பைனல் கட் ப்ரோ என்ற மென்பொருளை பயன்படுத்தி எடிட்டிங் செய்திருக்கிறோம். தரமான படங்கள் எடுக்கப்பட்டு உலக அரங்கில் தமிழ் சினிமா உயர வேண்டும் என்பதே எனது ஆசை. |