.
 
 
 
 
 
 

ரேஷன் கார்டுகள் விநியோகம்

.

Thursday, 18 May, 2017   04:12 PM
.
சென்னை, மே 18:  தமிழகத்தில் இதுவரை 80லட்சத்து 16 ஆயிரம் ஸ்மார்ட்  ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நாள்தோறும் 4 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக கிடங்கில் இன்று காலை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற் கொண்டார். உணவு பொருட்கள் இருப்பு மற்றும் வினியோகம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


இதன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க  அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்க வில்லை என்றால் பொதுமக்கள்  உடனடியாக புகார் அளிக்கும் பட்சத்தில், உரிய நடவடிக்கைகள் எடுத்து பொருட்கள் கிடைக்க ஆவண செய்யப்படும்.


இதேபோல், ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேவைக்கேற்ற வகையில் நிரப்பப்பட்டு வருகிறது.
அத்தி யாவசிய பொருட்கள் வழங்குவதில்  முறைகேடுகளில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டால் இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார்  அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


மேலும் ரேஷன் பொருட்கள் கடத்தலில் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அந்த வகையில் ரேஷன் பொருட்கள் கடத்தலில்  ஈடுபட்டதாக 973பேர் இந்த ஆண்டு மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ரேஷன் பொருட்கள் கடத்தலில் துறைசார்ந்தவர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏப்ரல் 1ம்தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.


அந்த வகையில் இன்றுவரை 80 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நாள்தோறும் புதியதாக 4 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.


விரைவில் தமிழகம் முழுவதும் அனைவருக்கும் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.
ரேஷன் கார்டுகளில் ஆதார் அட்டையை இணைக்கும் போது ஒரு சில பிழை ஏற்பட்டுள்ளது.ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யும் போது இந்த பிழை ஏற்பட்டுள்ளது.


இதனை பொதுமக்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் இ சேவை மையம் அல்லது நேரிலோ திருத்தம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

| |

?????? :