.
 
 
 
 
 
 

முதல்வர் ஆலோசனை

.

Thursday, 18 May, 2017   04:03 PM
.
சென்னை, மே 18: அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் நேற்று ரகசிய ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் நேற்று காலை முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார்கள்.


சில மணி நேரங்கள் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி மற்றும் கட்சியில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, அவர்களிடம் கட்சித் தலைமை சில உறுதிமொழிகளை அளித்ததாகவும், இதுவரை அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாதது குறித்தும், தொகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வராதது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


இந்த நிலையில், நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது.


அப்போது, இந்த விவகாரம் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. எனவே, போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் சமாதானம் செய்யும் முயற்சி தொடங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


இதுதவிர, உள்ளாட்சி தேர்தல், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் போதுமான ஆதாரங்களை சமர்ப்பிப்பது போன்ற சில விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

| |

?????? :