.




 
 
 
 
 
 

கர்ப்பிணிகளுக்கு ரூ.6000 உதவி தொகை

.

Thursday, 18 May, 2017   03:52 PM
.
புதுடெல்லி, மே 18:  கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் பேறுகால நலத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்தது.
.

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்முறையாக கர்ப்பம் தரிக்கும் அல்லது குழந்தை பெறும் தாய்மார்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை அளிக்கும் பேறுகால நலத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


கூட்டத்துக்குப் பிறகு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் தகவலை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், முன்பு சோதனை முயற்சியாக 56 மாவட்டங்களில் மட்டும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, முதல் 2 குழந்தைகளின் பிறப்பின்போது உதவித் தொகை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், முதல் குழந்தைக்கு மட்டுமே என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


இந்தத் திட்டம் குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-
பேறுகால நலத் திட்டத்தின்கீழ், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை 3 தவணைகளாக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் அளிக்கப்படும்.


இந்த திட்டத்தில் பதிவு செய்தவுடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் தவணையாக ரூ.1,000 அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து, 6 மாத காலத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிந்ததும் ரூ.2,000 அளிக்கப்படும். இதையடுத்து, குழந்தை பிறப்பு குறித்து பதிவு செய்ததும் ரூ.2,000 வழங்கப்படும். இவ்வாறாக, ரூ.5,000 உதவித் தொகை அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, எஞ்சிய தொகையும் அரசு விதிகளின்படி அளிக்கப்படும்.


இந்த உதவித் தொகையானது, தாய்மார்களின் வங்கிக் கணக்கில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் நேரடியாக செலுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நாட்டிலுள்ள 56 மாவட்டங்களில், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் பேறுகால நலத் திட்டம் மத்திய அரசால் சோதனை முயற்சியாக 2010-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி பேசியபோது, நாடு முழுமைக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

| |

?????? :