.
 
 
 
 
 
 

பேருந்துகள் வழக்கம்போல் ஓடின

.

Wednesday, 17 May, 2017   04:28 PM
.
சென்னை, மே 17:  போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் ஆனதையொட்டி இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. 
இயல்பு நிலை திரும்பியதையடுத்து கோயம்பேடு பேருந்துநிலையத்தில்  இருந்து அனைத்து இடங்க
ளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

.
13-வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15-ம் தேதி முதல் தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தனியார் பேருந்துகள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள் மூலமாக பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்றும் போராட்டம் தொடர்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து 12 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் நேற்றிரவு மீண்டும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், பணியில் உள்ள ஊழியர்களுக்காக மொத்த நிலுவைத்தொகையில் முதற்கட்டமாக ரூ.1250 கோடியை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள ரூ.450 கோடி நிலுவைத்தொகை செப்டம்பர் இறுதிக்குள் வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து 12 தொழிற்சங்க பிரதிநிதிகளும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். போராட்டம் வாபஸ் ஆனதையொட்டி அன்று அதிகாலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள டெப்போக்களில் காலை 6 மணி முதல் பேருந்துகளை இயக்கத் தொடங்கினர். இயல்புநிலை திரும்பியதையொட்டி சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயங்கத்தொடங்கின. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக வெறிச்சோடி கிடந்த பேருந்து நிலையம் மக்கள் வெள்ளத்தில் காணப்பட்டது. மாநகர பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.
| |

?????? :