.
 
 
 
 
 
 

டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

.

Wednesday, 19 April, 2017   03:39 PM
.
சென்னை, ஏப்.19:அதிமுகவில் இருந்து நேற்றே ஒதுக்கி விட்டேன். கட்சிக்கும் ஆட்சிக்கும் பலவீனம் ஏற்பட காரணமாக இருக்க மாட்டேன் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் இன்று பரபரப்பான முடிவை அறிவித்துள்ளார்.
.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவு பட்டு கிடந்த அதிமுகவினர் மத்தியில் இது பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.இரு அணிகளாக அதிமுகவினர் பிரிந்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி திடீரென சூடு பிடித்தது. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று ஓ.பன்னீர்
செல்வம் நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, தினகரன் ஆதரவு அணியினர் இன்று பிற்பகல் 3 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி உள்ளனர். அனைத்து எம்எல்ஏக்களும் எங்களுடன்தான் இருக்கிறார்கள் என்று தினகரன் கூறியிருந்தார்.இந்த நிலையில் இன்று காலை அதிமுக தலைமை கழகத்துக்கு துணை பொதுச்செயலாளர் தினகரன் வந்தார்.  அங்கிருந்த கட்சி அலுவலக ஊழியர்களிடம் விடைபெறுகிறேன் என்று கூறி புறப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பரபரப்பான தனது முடிவை அறிவித்தார்.

அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பிளவு ஏற்பட்டு சசிகலா  தரப்பு ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டு வந்தனர்.  இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் அதிமுக இரு அணியாக களமிறங்கியது. இதில் நடைபெற்ற பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக  இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இதனையடுத்து

இன்று செய்தியாளர்களிடம் டிடிவி. தினகரன் பேசியதாவது:-முதல்வர் மற்றும் அமைச்சர்களின்  இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. ஏதோ உள்நோக்கமும், பயமும் அவரை அச்சுறுத்துகிறது என்று நினைக்கிறேன்.  கட்சியை பலப்படுத்தும் வகையில் நான் நேற்று முதலே  ஒதுங்கியே இருக்கிறேன்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வரை உங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தவர்கள். இப்போது திடீரென்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக சொல்வது ஏன் என்று  கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

இது குறித்து நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.  அவர்களுக்கு  ஏதோ ஒரு அச்சுறுத்தல் இருக்கிறது.  அதை அவர்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். நான் கட்சியை பலவீனப் படுத்தவோ, என்னுடைய பலத்தை காட்டவோ  விரும்பவில்லை. நான் கட்சியில் இருப்பதால் அதிமுக மக்கள் செல்வாக்கை இழந்து விடும் என்று அவர்கள் கருதி இருந்தால் அதற்கு நான் வழி விடுகிறேன்.

 இன்று முதலே நான் செயல்படாமல் இருப்பேன். அப்போது மற்றொரு செய்தியாளர், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் தொடர்வீர்களா என்று கேட்டதற்கு,  எனக்கு  இந்த பதவியை தந்தது பொதுச்செயலாளர் சசிகலா. அவரை ஓரிரு நாளில் சந்தித்த பிறகு  இது குறித்து  நான் விளக்குவேன். அப்போது ஒரு செய்தியாளர், அமைச்சர்களின் இந்த முடிவுக்கு பிஜேபி தான் காரணமா என்று கேட்டார். அதற்கு, அது எனக்கு தெரியாது. அவர்கள் 3 நாட்களில்  பெரிய அளவில்  அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த மர்ம பயம் அவர்களை ஆட்டுவிக்கிறது.

அப்போது மற்றொரு செய்தியாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முடிவை நீங்கள் ஏற்று கொள்வீர்களா என்று கேட்டார். அதற்கு கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவகையிலும் கெடுதல் வராமல் அவர் எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்று கொள்ள தயாராக  இருக்கிறேன். ஆனால்  என்னை சார்ந்து இயங்கும் எம்எல்ஏக்கள் என்னிடம் உடனடியாக கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று  கேட்டு கொண்டதன் பேரில் தான் இன்று கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தேன்.

 இன்று நான்   நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதால் நிர்வாகிகளை வீட்டுக்கு வர சொல்லியுள்ளேன்.   நான் எப்போதும் கட்சிக்கு விரோதமாக செயல்பட மாட்டேன்.  
அப்போது செய்தியாளர் ஒருவர், இரு அணிகளும் ஒன்றிணைய என்ன காரணம் என்று கேட்டார்.அதற்கு, எனக்கு காரணம் தெரியவில்லை. காலம் அதற்கு பதில் சொல்லும்.  கட்சியின் நலனுக்காகவும், ஆட்சியின் நலனுக்காகவும் எங்களது குடும்பம் விலகி இருக்க நான்  விரும்புகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
| |

?????? :