.
 
 
 
 
 
 

திமுக உறுப்பினர்கள் அமளி

.

Thursday, 16 March, 2017   03:59 PM
.

சென்னை, மார்ச் 16: தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்யும் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெயரை குறிப்பிட்டு பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.


.

2017-2018 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை 10.30 மணியளவில் தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அப்போது தனது உரையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை புகழ்ந்து பேசினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவைக்குறிப்பில் இருந்து ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் பெயரை நீக்க வேண்டும் என்று  சபாநாயகரிடம் வற்புறுத்தினர்.


ஆனால் இதற்கு சபாநாயகர் திமுக உறுப்பினர்களை அமைதிகாக்குமாறு பலமுறை வற்புறுத்தினார். அதற்கு செவிசாய்க்காமல் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு நின்று கொண்டிருந்தனர்.  இதை தொடர்ந்து திமுக உறுப்பினர்களை சமாதானப்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை பேச அழைத்தார். இதை தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், தமிழக நிதி நிலை   அறிக்கையை தாக்கல் செய்யும் போது ஒரு நீதிமன்றத்தால் குற்றவாளி என கூறப்பட்டவர் குறித்து புகழ்ந்து பேசுவது சரியா?

ஒரு விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் போது அது தொடர்பாக சட்டசபையில் பேச நீங்கள் அனுமதி அளிப்பதில்லை. ஆனால் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள் குறித்து சட்டசபையில் பேசி பதிவு செய்வது சரியானதாக இருக்குமா? இதுவே தவறான முன்னுதாரணமாக அமைந்து விடாதா? ஆகவே நிதி அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.  இதை தொடர்ந்து அவை முன்னவர்  செங்கோட்டையன் பேசுகையில், அவையில் தங்களது கட்சி தலைவர்களை புகழ்ந்து பேசுவது என்பது மரபுதான்.

அந்தவகையில்  எங்களது பொதுச் செயலாளரை புகழ்ந்து பேசுவதில் தவறில்லை. ஏற்கனவே இது போன்று  புகழ்ந்து பேசியிருப்பது அவை மரபுகளில் உள்ளது.  அந்தவகையில் நீங்களும் பலமுறை புகழ்ந்து பேசி உள்ளீர்கள்.  அதற்கான உதாரணங்களை எங்களால் எடுத்து காட்ட முடியும். அந்தவகையில் சட்டமன்ற மரபின்படி எங்கள் பொதுச் செயலாளரை புகழ்ந்து பேசுவது  தவறு கிடையாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


இதை தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், அவை முன்னவர் குறிப்பிட்டதை நான் ஏற்று கொள்கிறேன். தலைவர்களை புகழ்ந்து பேசுவது என்பது அவை மரபுதான். ஆனால் நீதிமன்ற  விவகாரங்கள் தொடர்பாகவே  
சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படும் போது நீதிமன்றத்தால் குற்றவாளி என  கூறப்பட்டவர் குறித்து பேசுவது எப்படி  அனுமதிக்க முடியும். இதைத் தொடர்ந்து


செங்கோட்டையன் பேசுகையில், தண்டனை பெற்றவர்களை  தேர்தலிலே போட்டியிட முடியும். அப்படி இருக்கும் போது சட்டமன்றத்தில் பேசுவது தவறில்லை என கூறினார். இதற்கு  திமுக உறுப்பினர்கள் மீண்டும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்தி சபாநாயகர் பேசுகையில், கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது  இது போன்ற பிரச்சனைகள் எழுப்பப்பட்டு அப்போதே தீர்ப்பு வழங்கி உள்ளேன்.


ஆகவே அவரவர் கட்சித் தலைவர்களை பற்றி புகழ்ந்து பேசுவதில்  தவறில்லை. ஏற்கனவே நான் கூறிய உத்தரவை மீண்டும் உறுப்பினர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.  இதை தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில் அவை முன்னவர் தவறான தகவலை அவையில்  பதிவு செய்ய முற்படுகிறார். 4 ஆண்டுகள் சிறை, 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை, ரூ.100 கோடி அபராதம் என நீதிமன்றம் தனது தீர்ப்பில்  குறிப்பிட்டுள்ளது. அப்படி இருக்கும் போது தண்டனை பெற்றவர் எப்படி தேர்தலில் நிற்க முடியும். ஆகவே தவறான தகவல்களை அவை முன்னவர் பதிவு செய்ய முற்படுகிறார்.


இதைத் தொடர்ந்து செங்கோட்டையன் பேசுகையில் வழக்கு நடக்கும் போது மட்டும் தான் பெயரை குறிப்பிட்டு பேச முடியாது. ஆனால் எங்கள் பொதுச் செயலாளர் பெயரை இங்கு குறிப்பிட்டு பேசுவதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.

| |

?????? :