.
 
 
 
 
 
 

வாகன கடத்தல் கும்பல் கைது

.

Tuesday, 14 March, 2017   04:36 PM
.
சென்னை, மார்ச். 14: மணலி, மாதவரம் , திருவொற்றியூர் பகுதிகளில் தொடர்ந்து மாயமான 6 கனரக வாகனங்களை கடத்தி விற்று வந்த 7 பேர் கொண்ட கடத்தல் கும்பல் சிக்கியது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
.

சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச்செல்லவும், இறக்கிச்செல்லவும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான லாரிகள் மாதவரம், மணலி நெடுஞ்சாலையில் திருவொற்றியூர் வரை செல்கின்றன. வழியில் காலைக்கடன்களை முடிக்கவும், உணவு அருந்தவும் வெளிமாவட்ட, மாநில டிரைவர்கள் இந்த லாரிகளை சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். அப்போது யாரோ மர்ம நபர்கள் சிலர் இந்த லாரிகளை கள்ளச் சாவி போட்டு திறந்து கடத்தி வந்தனர். ஆனாலும் யாரும் பிடிபடாமல் இருந்தனர்.


இந்த நிலையில் மணலியை சேர்ந்த வர்த்தகர் குமார்( 45வயது) என்பவர் மாதவரம் 200 அடி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தனது கனரக லாரி திருட்டு போனது குறித்து புகார் அளித்திருந்தார். இதன் பேரில் மாதவரம் உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படை போலீசார்  ஒரு குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சோதனை செய்தபோது திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் அடிக்கடி குற்ற வழக்குகளில் சிக்கும் சுராபுதீன் என்பவர் ஒரு லாரியை கடத்திய காட்சி தெரிய வந்தது.


இதையடுத்து அவரைப்பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் மாதவரத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 34), மன்னாரை சேந்த குமரன் (வயது 36), தண்டையார் பேட்டையை சேர்ந்த ரியாஸ் அலி வயது 43), கொடுங்கையூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 29), அகரத்தை சேர்ந்த ஏழுமலை வயது 26), திருத்தணியை சேர்ந்த வீரராகவன் ( வயது 54) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிர் சிராபுதீன், ராஜேஷ், செந்தில் ஆகியோர் இரவு நேரங்களில் இருட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை கடத்துவதில் கை தேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறினர்.   


கடந்த 3 மாதங்களில் மட்டும் இது வரை  6 லாரிகளை கடத்தி நம்பர் பிளேட்டுகளை மாற்றி இவர்கள்
ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை ரேட் வைத்து விற்று வந்ததும், போலி பதிவெண்களைப்பெற மட்டும் ஒரு லாரிக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை புரோக்கர்களுக்கு கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.


மேலும் திருடிய லாரிகளை பெரும்பாலும் சென்னையை சேர்ந்த வர்த்தகர்களுக்கே விற்று வந்துள்ளனர். திருட்டு லாரிகளை வாங்கும் அந்த வர்த்தகர்கள் குறித்தும், போலி பதிவெண்கள் அளித்தவர்கள் குறித்தும் விரைவில் பல தகவல்கள் வெளியாகும் எனவும் போலீசார் கூறினர்.  

| |

?????? :