.




 
 
 
 
 
 

பொங்கல் விடுமுறையை கட்டாயமாக்குக

.

Tuesday, 10 January, 2017   03:56 PM
.
சென்னை, ஜன.10: பொங்கல் திருவிழா ஜாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட விழா என்பதால் அந்த நாளில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறையை மீண்டும் அறிவிக்க வேண்டும் என்று கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மத்திய அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
.

இது குறித்து அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;   உலகின் மூத்த குடியான தமிழர்கள் பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழும் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள் அன்று தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை நாளாக இருந்த நிலை மாற்றப்பட்டு, விருப்ப விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது.  
பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் ஜாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த விழா.  
இந்த விழாவை அனைவரும் குடும்பமாகக் கொண்டாடி மகிழ விடுமுறை அளிப்பது மத்திய அரசின் கடமை. இந்த ஆண்டு பொங்கல் விழா சனிக் கிழமை அன்று தானே வருகிறது. 

அது விடுமுறை நாள் தானே என்று ஒதுக்காமல், பொங்கல் விழாவை மதிக்கும் வகையில் அதனை விடுமுறை நாளாக அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் அளிப்பது அவசியம். தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மத்திய அரசு உணர்ந்து ஏற்று, உடனடியாக தமிழர்களின் பெருமை மிகு பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவுக்கு கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.


கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தமிழர்களின் பல்வேறு உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.  
அதைப் போலவே, அவருடைய வழியில் என்றும் நடைபோடும் தமிழகம், பொங்கல் விழாவுக்கான விடுமுறையை மத்திய அரசு உடனடியாக அறிவித்து தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும், உரிமையையும் உறுதி செய்யும் என்று காத்திருக்கிறது.

| |

?????? :