.
 
 
 
 
 
 

வறட்சி அறிக்கை தாக்கல்

.

Tuesday, 10 January, 2017   03:36 PM
.

சென்னை, ஜன.10: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிகுறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவின் அறிக்கை இன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்படும்.


.

வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுத்ததாலும், டெல்டா மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பயிர் காய்ந்ததை பார்த்து அதிர்ச்சியில் பல விவசாயிகள் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து விவசாயிகள் சங்கத்தினர் உரிய நிவாரணம் கோரி தமிழக அரசிடம் முறையிட்டனர்.


விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப் பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தனர்.  அப்போது அரசு தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஏற்று ஜனவரி 5ம் தேதி நடைபெறுவதாக இருந்த சாலைமறியல் போராட்டத்தை விவசாயிகள் சங்கம் ரத்து செய்தது. இதனிடையே எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


இதையடுத்து சென்னை  நீங்கலாக பிற 31 மாவட்டங்களுக்கும்  சென்று வறட்சி குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை முதலமைச்சர் அமைத்தார். இந்த குழுவினர் 5 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காய்ந்து கிடக்கும் விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.


உயிரிழந்த விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினரிடம் விவரங்களை சேகரித்தனர். இந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று தலைமைச்செயலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபாலிடம் கொடுத்தனர். அதை அவர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் தாக்கல் செய்தார்.


இந்த அறிக்கை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிவாரண நிதியுதவி பெறப்படும். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்கும் என்று தெரிகிறது.

| |

?????? :