.
 
 
 
 
 
 

கண்டலேறு அணை தண்ணீர் திறப்பு

.

Tuesday, 10 January, 2017   03:30 PM
.

சென்னை, ஜன.10: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீரை சென்னைக்கு ஆந்திர அரசு திறந்துவிட்டுள்ளது. விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டு இருக்கும் இந்த தண்ணீர் இன்னும் 2 நாளில் பூண்டி நீர் தேக்கத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


.

வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 நீர்தேக்கங்களில்  நேற்று நிலவரப்படி மொத்த கொள்ளவில் 14 சதவீதம் அளவிற்கே தண்ணீர் உள்ளது.  இதனால் சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு சென்னைக்கு ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். ஒப்பந்தப்படி ஆண்டுக்கு இரு முறை வீதம் 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் ஆனால் கடந்த ஆண்டில் 0.99 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்பற்றாக்குறை அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு விவசாய கிணறுகளில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்தையும் அதிகாரிகள் வகுத்து உள்ளனர். நெமிலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளில் பழுதை நீக்கி உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வர்தா புயல் காரணமாக டிசம்பரில் கிருஷ்ணா நீர்திறப்பை ஆந்திர அரசு நிறுத்தி வைத்திருந்தது.


முதலமைச்சரின் கடிதத்திற்கு பிறகு கண்டலேறு அணையில் இருந்து நேற்று வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதே அளவில் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் சென்னைக்கு 1 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்று தெரிகிறது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து வந்து கொண்டு இருக்கும் கிருஷ்ணாநீர் நாளை மறுதினம் பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

| |

?????? :