.
 
 
 
 
 
 

மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி

.

Thursday, 05 January, 2017   04:08 PM
.
சென்னை, ஜன.5: 6-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் 117-வது நிலை வீரரான ஸ்லோவேகியாவின் கோவாலிக்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 2வது சுற்றில் களமிறங்குகிறார்.
.
தெற்கு ஆசியாவில் ஏடிபி தகுதி கொண்ட ஒரே போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த 2-ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

3-வது நாளான நேற்று டென்னிஸ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சர்வதேச தரவரிசையில் 6-ம் இடத்திலும் போட்டி தரவரிசையில் முதல் இடத்திலும் இருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் களமிறங்கினார். 117-வது நிலை வீரரான ஸ்லோவேகியாவின் ஜோசப் கோவாலிக்கை எதிர்கொண்டார்.

இந்த இரு வீரர்களும் தொடக்கம் முதல் ஆட்டத்தை விட்டுக்கொடுக்காமல் ஆடி டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர்.
முதல் செட்டின் முதல் கேம்மை கோவாவலிக் வெற்றியுடன் தொடங்கினார். 2-வது கேம்மில் இருவரும் போட்டிப்போட்டு பாயின்ட்ஸ் பெற அந்த கேம் 5 டியூஸ் வரை சென்றது. முடிவில் அந்த கேம்மை அசத்தலாக ஏஸ் அடித்து சிலிச் வென்றார். முதல் செட்டில் 13 கேம்கள் விளையாடப்பட்டது. கடைசியில் செட் டையானது. டை பிரேக்கரில் ஆக்ரோஷத்தை காட்டிய கோவாலிக் முதல் செட்டை 6-7 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார்.

அடுத்த செட்டில் மரின் சிலிச் தனது அனுபவ ஆட்டத்தை காட்டினார். முதல் 3 கேம்களையும் எளிதாக வென்ற மரின் சிலிச் அந்த செட்டின் 9 கேம்மில் கோவாலிக்கை   நிலைகுலைய செய்து 2வது செட்டை 7-5 என்ற கணக்கில் வென்றார்.

வெற்றியை முடிவு செய்யும் 3வது செட்டில் சிலிக் வெற்றியுடன் தொடங்கினார். ரசிகர்கள் அனைவரும் மரின் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்திருந்த நிலையில் கோவாலிக் தான் சளைத்தவன் இல்லை என்பது போல ஈடுகொடுத்து ஆட்டத்தை  கடினமாக்கினார். அந்த செட்டின் வெற்றியை முடிவு செய்யும் 12-வது கேம் வரை யார் வெல்வார் என்று யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரசியமாக அமைந்தது. இந்த போட்டி 2.48 மணிநேரங்கள் நீடித்தது.

3 டியூஸ் வரை சென்ற கேம்மை கோவாலிக் வெற்றியுடன் முடித்து வைத்தார். தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் மரின் சிலிச் தோல்வி அடைந்தாலும் கோவாலிக்கின் சிறப்பான ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. மரின் சிலிச் இரண்டு முறை சென்னை ஓபன் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வி குறித்து மரின் சிலிச் கூறுகையில், கோவாலிக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் இதுவரை அவரை பார்த்ததில்லை. அவர் ஆட்டம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது அது என்னுடைய ஆட்டத்தில் பின்னடைவாக அமைந்துவிட்டது. முதல் செட்டில் நான் சரியாக விளையாடவில்லை. இரண்டாவது சுற்றில் நான் சுதாரித்து ஆடினேன். ஆனால் அதன் பின் என்னால் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றார்.

வெற்றி பெற்ற கோவாலிக் கூறுகையில், மைதானத்தில் என்னை ரசிகர்கள் ஊக்கப்படுத்தினர். நான் அதை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வீரருடன் ஈடுகொடுப்பதை கற்றுக்கொண்டேன். இதில் தோல்வியடைந்திருந்தாலும் நான் எதையும் இழந்திருக்க மாட்டேன். ரசிகர்களின் ஆதரவு என்னை மகிழ வைத்தது என்று கூறினார்.

சென்டர் கோர்டில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இஸ்ரேலின் டூடி செலா தென் கோரியாவின் ஹியோன்
சங்கை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். மற்றோரு ஆட்டத்தில் ரஷ்யாவின் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற செட்கணக்கில் சீன தைபேவின் யேன் சன் லூ வை வீழ்த்தினார். மேலும் மற்றோரு ஆட்டத்தில் ஸ்பெயினின் ஆல்பர்ட் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் ஸ்டீவன் டார்சிசை வீழ்த்தினார்.

இரட்டையர் பிரிவில் இந்தியவின் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி கலப்பு ஜோடியான இந்தியாவின் லியாண்டர் பயஸ்-பிரேசிலின் ஆண்ட்ரோ சா’ஜோடியை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றது. மற்றோரு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ் செழியன் ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரேசிலின் மார்செலோ டெமோலைனர் - குரேஷியாவின் நிக்கோலா மெக்டிக் ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ் - பிரான்சின் பெனோயிட் பேர் ஜோடி இந்தியாவின் சாகேத் மைனேனி - ராம்குமார் ஜோடியை 6-4, 0-6, 10-8 என்ற செட் கணக்கில் வென்றது.
| |

?????? :