Advertisements




 
 
 
 
 
 

முதல்வர் சொன்ன குட்டிக்கதை

.

Thursday, 13 September, 2012   03:49 PM
.

ஸ்ரீரங்கம்,  செப்.13:காரியம் கைகூடும் வரை உடன் இருந்துவிட்டு பின்னர் பழிச் சொற்களை அள்ளி வீசுகிறார்கள் சிலர் என்று கூறிய முதலமைச்சர் ஜெயலலிதா, நன்றி மறந்த கருப்பு வியாபாரி பற்றி குட்டிக்கதை ஒன்றை கூறினார்.
.
ஸ்ரீரங்கத்தில் அவர் கூறிய குட்டிக்கதை வருமாறு:ஒரு ஊரில் ஒரு பெரும் வியாபாரி இருந்தார். அந்த வியாபாரி சில காலம் வேறொரு சிறிய வியாபாரியுடன் இணக்கமாக இருந்து வியாபாரம் செய்து வந்தார். சில காலத்திற்கு பின் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டது.

உடனே, அந்த பெரும் வியாபாரி, இந்த சிறிய வியாபாரி தவறு செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும், அவரிடம்  பணிபுரிபவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும் கூறி அவர் மீது புகார் கூறினார்.   

இந்தக் குற்றச்சாட்டினால் கவலையடைந்த அந்த சிறிய வியாபாரி, தனது நண்பன் மூலம் ஒரு பெரிய வழக்கறிஞரை அணுகினான். ஆனால் அந்த வழக்கறிஞர் தன்னால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியாது என்று கூறிவிட்டார்.  இருப்பினும், அன்று மாலை அந்த சிறிய வியாபாரி வழக்கறிஞர் வீட்டிற்குச் சென்று காத்துக் கொண்டிருந்தார். வழக்கறிஞர் வந்தவுடன், தன் வழக்கிற்காக வாதாட வேண்டும் என்று அவரிடம் மீண்டும் மன்றாடினார் அந்த வியாபாரி. அந்த வியாபாரியின் மீது பரிதாபப்பட்டு, வழக்கினை ஏற்று நடத்த சம்மதம் தெரிவித்தார் அந்த வழக்கறிஞர். வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து வருமாறு அந்த வியாபாரியிடம் தெரிவித்தார் வழக்கறிஞர்.

இதனையடுத்து, மறுநாள் வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார் அந்த வியாபாரி. ஆவணங்களைப் படித்துப் பார்த்த வழக்கறிஞர், இந்த வழக்கினை தன்னால் நடத்த முடியாது என்றும், நீங்கள் வேறொரு வழக்கறிஞரைப் பார்த்து கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

ஆனால் அந்த வியாபாரி, உங்களைத்தான் நம்பி வந்துள்ளேன். இந்த வழக்கினை நீங்கள் தான் வெற்றிகரமாக முடித்துத் தர வேண்டும் என்று வேண்டினான். வியாபாரியின் இந்த வேண்டுகோளினைக் கேட்ட வழக்கறிஞர், தனது பிற பணிகளை ரத்து செய்துவிட்டு வியாபாரியின் வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.  வெகு விரைவில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கறிஞரின் வாதத்தால், அந்த சிறிய வியாபாரி வழக்கிலிருந்து விடுபட்டார்.

ஆனால் பிறகு அந்த வழக்கறிஞரை சந்திக்கவும் இல்லை; நன்றியும் கூறவில்லை. அந்த வியாபாரியின் நண்பன் வழக்கறிஞரின் வாதத் திறமையால் தான் இந்த வழக்கு வெற்றி பெற்றது என்றார். அதற்கு அந்த வியாபாரி என் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு உண்மையிலேயே பலவீனமானது.  இதில் வழக்கறிஞரின் பங்கு ஒன்றும் இல்லை. பணத்திற்காகத் தான் இந்த வழக்கறிஞர் இதர பணிகளை விட்டு விட்டு வாதாடினார் என்று அந்த வியாபாரி கூறினான். கதையில் வரும் இந்த வியாபாரி கருப்பாக இருப்பார்.  அவர் நிறம் மட்டும் கருப்பாக இருந்தால் பரவாயில்லை.  ஆனால், அவர் உள்ளமும் கருப்பு என்பதை அவர் நிரூபித்துவிட்டார்.

இது போன்று தான், ஒரு சிலர் காரியம் கைகூடும் வரை உடன் இருந்துவிட்டு, பின்பு நம் மீதே பழிச்சொற்களை நாள்தோறும் அள்ளி வீசி வருகிறார்கள். ஆனால், யார் என்ன பேசினாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற குறிக்கோளுடன் மக்கள் நலத் திட்டங்களை நான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
| |

மற்றவை :