.
 
 
 
 
 
 

மத்திய அரசு பணிந்தது

.

Wednesday, 04 April, 2012   03:56 PM
.

சென்னை, ஏப்.4:தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து விவாதிக்க மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
.
இதற்கான கூட்டம் மே 5ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர்  இதில் பங்கேற்க தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி ஆலோசிப்பதற்காக தனியாக முதல்மந்திரிகளின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது.

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் வரும் மே 5ந் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் முதல்மந்திரிகளின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர்ஜெயலலிதாவுக்கு மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

தாங்கள் (முதலமைச்சர் ஜெயலலிதா) கடந்த பிப்ரவரி 20, மார்ச் 5 ஆகிய தேதிகளில் பிரதமருக்கு எழுதிய கடிதங்களின் தொடர்ச்சியாக ஏப்ரல் 2ந் தேதி எழுதிய கடிதம் பிரதமருக்கு கிடைத்தது. உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதல்மந்திரிகளின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும்.

இந்த ஆண்டு இந்த மாநாட்டை கடந்த பிப்ரவரி மாதம் 15ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்றக் கூட்டத் தொடர் காரணமாக இந்த மாநாடு ஏப்ரல் 16ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.இந்த மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் அனைத்தும் முக்கியமானவை என்றும், அதுகுறித்து மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமரும், நானும் கருதினோம். இதற்கிடையில், தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாங்களும், சில மாநில முதல்மந்திரிகளும் பிப்ரவரி மாதம் 17ந் தேதி கடிதம் எழுதியிருந்தீர்கள். அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் பிரச்சினைக்குள்ளானது.

இருந்தபோதும், இந்த மையம் அமைப்பது முக்கியமானது எனக் கருதி, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான ஆண்டு மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரலில் இதனையும் சேர்த்தோம். அந்த மாநாட்டில், தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக விவாதிப்பதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்று நம்பிக்கையோடு இருந்தோம்.
இதற்கிடையே, இந்த மையம் அமைப்பது தொடர்பாக விவாதிக்க தனியாக முதல்மந்திரிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தாங்கள் பிரதமருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். இதைத்தொடர்ந்து வரும் மே 5ந் தேதி முதல்மந்திரிகளின் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த தகவலை அனைத்து முதல்மந்திரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும், கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொள்ளுமாறு என்னை பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே திட்டமிட்டபடி, உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்கள் ஏப்ரல் 16ந் தேதி நடைபெறும் முதல்அமைச்சர்கள் மாநாட்டிலும், மே 5ந் தேதி நடைபெறும் முதல்மந்திரிகளின் சிறப்புக் கூட்டத்தில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த விஷயங்களும் விவாதிக்கப்படும். இந்த இரண்டு கூட்டங்களிலும் தாங்கள் கலந்து கொள்வதை உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
| |

?????? :