.
 
 
 
 
 
 

சச்சின் லண்டன் பயணம்

.

Wednesday, 28 March, 2012   03:39 PM
.
லண்டன், மார்ச் 28:இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கால் பாத வலி தொடர்பாக மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக லண்டன் சென்றுள்ளார்.
.
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் சாதனைமேல் சாதனை படைத்து வருகிறார். சமீபத்தில் அவர் நூறாவது சதம் அடித்து இமாலய சாதனை படைத்தார். சுமார் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு அவர் ஆசிய கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் லண்டன் நகருக்கு சென்றுள்ளார். மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக அவர் லண்டன் சென்றுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே கால்பாத வலி தொடர்பாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர், லண்டனில் சிகிச்சையும் பெற்றார்.

இந்நிலையில், கால் பாத வலி பாதிப்பு மீண்டும் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ ஆலோசனை பெற சச்சின் விரும்பியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர் லண்டன் மருத்துவரை சந்திக்க சென்றுள்ளார். நேற்று மாலை அவர் லண்டன் புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. சச்சின் டெண்டுல்கர் ஓரிரு நாட்கள் லண்டனில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 4ம் தேதி 5வது ஐபிஎல் போட்டிகள் துவங்குகின்றன.

அதற்கு முன்பாக இந்தியா திரும்பி விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரின் போதும் சச்சின் டெண்டுல்கர் பாத வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், அதன் பிறகு நடைபெற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்காக அக்குபிரஷர் போன்ற சிகிச்சை முறைகளை அவர் நாடியதாக தெரிகிறது.

அறுவை சிகிச்சை செய்து கொள்வதை தவிர்க்க விரும்பிய அவர், இந்த சிகிச்சை காரணமாக திருப்தியடைந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் மருத்துவருடன் ஆலோசனை பெற திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவ ஆலோசனை வழக்கமான ஒன்றுதான் என்று சச்சின் டெண்டுல்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| |

?????? :