.
 
 
 
 
 
 

ஆ.ராசாவுக்கு சம்மன்

.

Thursday, 22 March, 2012   04:11 PM
.
புதுடெல்லி, மார்ச் 22:2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, தங்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்ப பாராளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.
.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் சி.பி.ஐ. கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. அதே சமயத்தில், காங்கிரஸ் எம்.பி. பி.சி.சாக்கோ தலைமையில் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் அழைத்து இக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், முன்னாள் தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசாவை விசாரணைக்கு அழைக்க பாராளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது. டெல்லி திகார் ஜெயிலில் இருக்கும் ஆ.ராசாவுக்கு இதுதொடர்பாக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.
இத்தகவலை கூட்டுக்குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்தார். ஆ.ராசாவை வரவழைக்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து கூட்டுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது, முதலில் வருபவர்க்கு முன்னுரிமை, ஒதுக்கீட்டில் பின்பற்ற வேண்டிய நடைமுறை, விண்ணப்பங்களை பரிசீலித்தல் போன்றவற்றில் மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் அதன் அதிகாரிகளின் ஆலோசனைப்படியே ஆ.ராசா செயல்பட்டதாக சில அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனவே, இந்த விஷயங்களில் ஆ.ராசா செய்த சட்டவிரோத தன்மை குறித்து அறிய வேண்டி இருப்பதால், அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல், ஆ.ராசாவுடன் கைதாகி, திகார் ஜெயிலில் உள்ள தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுராவையும் விசாரணைக்கு அழைக்க பாராளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது. அவரை ஏப்ரல் 11ந் தேதி, விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு திகார் ஜெயில் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத அக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.மாத்தூரிடம் பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று விசாரணை நடத்தியது. இவர், 2006ம் ஆண்டு ஜுலை முதல் 2007ம் ஆண்டு பிப்ரவரிவரை அப்பதவியில் இருந்தார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) சிபாரிசுகளை பின்பற்றுவதில் முறைகேடுகள் நடந்ததா? என்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு மாத்தூர், பல்வேறு விஷயங்களில் தொலைத்தொடர்பு துறை அதிகாரிகளின் ஆலோசனையை பெற்று ஆ.ராசா செயல்பட்டதாக கூறினார். ஆ.ராசாவின் சில முடிவுகளுக்கு, தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் அந்த எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
| |

?????? :