Advertisements




 
 
 
 
 
 

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்

.

Thursday, 06 October, 2011   01:55 PM
.
நியூயார்க், அக்.6:ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், ஐபாடு, ஐபோன் மற்றும் ஐபேடு ஆகிய தொழில்நுட்ப உலகை மாற்றியமைத்த மகத்தான சாதனங்களை உருவாக்கியவருமான ஸ்டீவ் ஜாப்ஸ் தனது 56வது வயதில் மரணமடைந்தார்.
.
அமெரிக்க அதிபர் ஒபாமா, மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளிட்டோர் ஜாப்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கம்ப்யூட்டர் உலகில் செல்வாக்கு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் கம்ப்யூட்டர் விளங்கி வருகிறது. மவுஸ் பயன்பாட்டிற்கு அடிப்படையாக சொல்லப்படும் கிராபிகல் இன்டர்பேஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப புதுமைகளை கம்ப்யூட்டர்களில் அறிமுகப்படுத்திய முன்னோடி நிறுவனமாக ஆப்பிள் கருதப்படுகிறது.

வடிவமைப்பிலும், செயல் திறனிலும் சிறப்பு மிக்க தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனமாகவும் ஆப்பிள் பாராட்டப்படுகிறது. இந்த நிறுவனத்தை 1980களில் தனது நண்பர் ஸ்டீவ் வாஸ்னிக்கோடு சேர்ந்து ஸ்டீவ் ஜாப்ஸ் நிறுவினார். அதன் பிறகு ஆப்பிள் உருவாக்கிய மேக்கின்டாஷ் கம்ப்யூட்டர் மகத்தான வெற்றி பெற்று கம்ப்யூட்டர் பயனாளிகளின் ஆதர்ச சாதனமாக உருவானது.

வடிவமைப்பு மற்றும் மார்க்கெட்டிங் மேதையாக கருதப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் நடுவே ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறி மீண்டும் அந்த நிறுவனத்தில் இணைந்தார். அதன் பிறகு அவர் ஐபாடு எம்.பி.3 பிளேயரை அறிமுகம் செய்தார். இன்டெர்நெட் சார்ந்த இசைப்புரட்சிக்கு இந்த சாதனம் வித்திட்டது. ஐபாடை தொடர்ந்து ஐபோனை அறிமுகம் செய்து மீண்டும் ஒரு புரட்சியை ஜாப்ஸ் உண்டாக்கினார். ஸ்மார்ட் போன் எழுச்சியின் துவக்கமாக அமைந்த ஐபோனுக்கு அடுத்தபடியாக டேபலெட் கம்ப்யூட்டர்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஐபேடு சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்தது.

தொழில்நுட்ப உலகில் பெரும் வெற்றி பெற்ற இந்த சாதனங்களின் பின்னே ஜாப்சின் தொழில்நுட்ப அறிவு மற்றும் தொலைநோக்கு தன்மை இருப்பதாக பாராட்டப்படுகிறது. ஆப்பிளை புதிய திசையில் முன்னேற வைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் உலகம் முழுவதும் உள்ள வடிவமைப்பாளர்களின் ஆதர்ச நாயகனாக கருதப்படுகிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிளின் தலைமை பதவியிலிருந்து விலகி கொண்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலமானார். அவருக்கு வயது 56. ஜாப்சின் உயிர் அமைதியாக பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.அமெரிக்க அதிபர் ஒபாமா, மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்ஸ் உள்ளிட்டோர் ஜாப்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
| |

மற்றவை :