.
 
 
 
 
 
 

'தமிழீழ தனியரசு தான் தீர்வு'

.

Monday, 21 December, 2009   11:29 AM
.
டொராண்டோ, டிச.21:தமிழீழ தனி அரசை ஏற்படுத்துவதே ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்பதை சர்வதேச சமுதாயத்திற்கு மீண்டும் எடுத்துக்காட்டும் வகையில் கனடா வாழ் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடையே நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் ஏறத்தாழ 100 சதவிகிதம் பேரும்  தமிழீழத்திற்கு ஆதரவாக ஒருமனதாக வாக்களித்துள்ளனர்.
.
ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு தமிழீழ தனி நாட்டை அமைப்பதுதான் என்று 1976ம் ஆண்டு இலங்கையின் வட்டுக்கோட்டையில்  மறைந்த தமிழர் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில்  தமிழர்கள் இன்றும் உறுதியுடன் உள்ளனர் என்பதை மீண்டும் சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே கருத்து வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ் ஈழத்திற்காக போராடி வந்த விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள்; அவர்களுக்கு எதிரான போர் முடிவடைந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில், தமிழீழ தனி அரசை அமைக்கும் தங்கள் உறுதிப்பாட்டை  உலகத்திற்கு உணர்த்துவதற்காகவும், தமிழ் ஈழத்திற்கான தங்கள் போராட்டம் ஓயவில்லை என்பதை  எடுத்துக்காட்டவும் இந்த கருத்து வாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் அண்மையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கருத்து வாக்கெடுப்பிலும் ஏறத்தாழ 100 சதவிகித புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழீழத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை கனடா முழுவதும் ஈழத்தமிழர் களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் இதேபோன்று ஏறத்தாழ  100 சதவிகிதம் பேரும் ஒருமனதாக தமிழீழ தனி அரசுக்கு ஆதரவு நல்கி இருக்கிறார்கள்.

அன்றைய தினம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கனடா முழுவதும் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் 48 ஆயிரத்து 583 பேர் வாக்களித்தனர். இவர்களில் 48 ஆயிரத்து 481 பேர் தமிழீழத்தை முன்மொழிந்த வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். வெறும் 85 பேர் தான் அதற்கு எதிராக வாக்களித்து உள்ளனர்.

அத்துடன் 17 வாக்குகள்  செல்லத்தக்கவை அல்ல என்று அறிவிக்கப்பட்டது. இக்கருத்து வாக்கெடுப்பு முடிவின்படி 99.82 சதவிகிதம் பேர் அதாவது ஏறத்தாழ 100 சதவிகிதம் பேர் தமிழீழத்திற்கு ஆதரவாக ஒருமனதாக வாக்களித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்து வாக்கெடுப்பை "இஎஸ் அண்டு எஸ்' என்ற புகழ்பெற்ற வட அமெரிக்க தேர்தல் நிறுவனம் நடத்தி உள்ளது. இந்த நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தல் முதற்கொண்டு பல்வேறு தேர்தல் களை நடத்தி வரும் மிகச் சிறந்த நிறுவனமாகும்.

தமிழீழத்திற்கு ஆதரவு இல்லை என்பது போன்ற கருத்துக்களை திட்டமிட்டே சிலர் பரப்பி வரும் நிலையில் அதில் தாங்கள் உறுதி யுடன் இருப்பதை ஈழத் தமிழர்கள் மீண்டும் இந்த கருத்து வாக் கெடுப்பின் மூலம் நிரூபித்திருக் கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| |

?????? :