இலங்கைக்கு வர்த்தக சலுகை ரத்து |
||
. |
||
Monday, 19 October, 2009 02:07 PM
|
||
| . | ||
கொழும்பு/லண்டன், அக். 19:விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் 100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வர்த்தக சலுகைகளை இலங்கை அரசு இழக்க உள்ளது. |
||
| . | ||
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, அப்பாவித் தமிழ் மக்கள் அந்நாட்டு ராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்டனர். போரை தொடர்ந்தும் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அகதி முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், மனித உரிமைகள் மறுக்கப்பட்டும் கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், போரின் போது இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது பற்றியும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரிக்க ஆணையம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் அமைத்தது.இந்த ஆணையம் வழங்கியுள்ள விசாரணை அறிக்கையில் போரின் போது அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, மனித உரிமைகள் மீறல் போன்ற குற்றங்களுக்காக இலங்கைக்கு வழங்கி வரும் வர்த்தக சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனித உரிமை மீறல்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கூடுதலான வர்த்தக சலுகைகளை இலங்கை அரசு இழக்கும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. "இந்த சலுகைகள் இழப்பானது வர்த்தக தடையல்ல; விதிமுறைகள் மீறப்பட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டும்' என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் விரிவாக விவாதிக் கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள், இலங்கை அரசுக்கு வழங்கி வரும் வர்த்தக சலுகைகளை ரத்து செய்வது குறித்து நவம்பர் இறுதிக்குள் முடிவு செய்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் மாபெரும்பேரணி இதனிடையே, வவுனியாவில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்களையும் விடுதலை செய்து அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி பிரிட்டனில் வாழும் தமிழர்கள் லண்டன் நகரத்தில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினார்கள். தீபாவளிப் பண்டிகையன்று 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரிட்டன் வாழ் தமிழர்கள் பங்கேற்ற இந்த கவன ஈர்ப்பு பேரணியில் நூற்றுக்கணக்கான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான தமிழ் ஈழக் கொடி, பிரிட்டன் தேசியக் கொடி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏந்தி வந்தனர். அத்துடன் இலங்கையில் தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்கள் படுகின்ற இன்னல்களை சித்தரிக்கும் பேனர்களும், படங்களும் பேரணியில் கொண்டு வரப்பட்டன. இந்த பேரணியில் லண்டன் எம்பிக்கள், கொலம்பியா, குர்திஷ், பாலஸ்தீன பிரதிநிதிகள், பிரிட்டனில் உள்ள சீக்கிய சமூகத்தினர், சிவில் உரிமைகள் மற்றும் சமூக நீதி அமைப்பினர் ஆகியோரும் திரளாக கலந்து கொண்டனர். இதில் பேசிய லண்டன் எம்பிக்கள், இலங்கையில் நாள்தோறும் தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்து வருவது குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று வேதனை தெரிவித்தனர். முகாம்களில் உள்ள ஒவ்வொரு தமிழரையும் அவர்களுடைய சொந்த வீடுகளுக்கு அமைதி மற்றும் கண்ணியத்துடன் திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























