Advertisements




 
 
 
 
 
 

அழிவை எதிர்கொள்ளும் ஈழத்தமிழர்கள்

.

Friday, 09 October, 2009   12:27 PM
.
வாஷிங்டன், அக். 9:இலங்கையில் பருவமழை காரணமாக அகதி முகாம்களில் வெள்ள ஆபத்து இருப்பதால் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் மனித  அவல பேரழிவை  எதிர்கொண்டு வருவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனப்படும் சர்வதேச பொது மன்னிப்புச்சபை கூறியுள்ளது.
.
இலங்கையில் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்ததை தொடர்ந்து போர் காரணமாக  இடம் பெயர்ந்த சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இலங்கை அரசு போதிய அடிப்படை வசதிகளை  செய்து கொடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இந்தநிலையில் அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் எனப்படும் சர்வதேச பொது மன்னிப்புச் சபையும் இலங்கை  அரசை  கடுமையாக குறை கூறியுள்ளது.

 பருவமழை காரணமாக  முகாம்களில் வெள்ளம் ஏற்படும் ஆபத்து இருப்பதால் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் மனித அவல பேரழிவை எதிர்கொண்டு வருவதாக அது கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள  அறிக்கையில் வவுனியா முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க இலங்கை அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

 முகாம்களில் அளவுக்கு அதிகமான தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் செப்டம்பர் மாத மழையில் முகாம்களை சுற்றியும் கூடாரங் களிலும்  மழை வெள்ளம் ஓடியதால் முகாம்களில் இருந்த  தமிழர்கள் பாய்ந்தோடிய கழிவு நீரிலேயே இருக்க நேரிட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முகாம்களில் உள்ள தமிழர்கள் வேறுவழியின்றி தான் அங்கு உள்ளனர். அவர்கள் கவுரவத்துடன் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் இலங்கைக்னா அதிகாரி யோலண்டா ஃபோஸ்டர் தெரிவித்துள்ளார்.

முகாம்களில் விடுதலைப்புலிகள் உள்ளனரா என்று சோதித்து அறியும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இந்த பணியானது அனைத்து தமிழர்களையும் ஒட்டுமொத்தமாக தண்டிப்பதற்கு பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

புலிகளை சோதித்தறியும் பணியை சுதந்திரமாக கண்காணிக்க வழிமுறைகள் ஏதும் இல்லாததற்கு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முகாம்களில் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் மனித அவல பிரச்சனைகளை சமாளிக்கவும், அவற்றுக்கு தீர்வுகாணவும் சுதந்திரமான மனிதநேய நிறுவனம் ஈடுபடுத்தப்பட வேண்டும். இனிமேலும் முகாம்களில்  உள்ள தமிழர்களின் வேதனைக்குரல்களை சர்வதேச சமுதாயமும் இலங்கை அரசும் புறக்கணித்துவிட முடியாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
| |

மற்றவை :