Advertisements




 
 
 
 
 
 

கமலுக்கு ரஜினி பாராட்டு

.

Tuesday, 29 September, 2009   12:45 PM
.
சென்னை, செப். 29:கமல்ஹாசனை பார்த்து நடிக்க கற்று கொண்டேன் என்று ரஜினிகாந்த் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
 திரையுலகில் தான் வளர்ச்சி அடைந்ததற்கு கமலே காரணம் என்றும் அவர் கூறினார்.
.

கமல்ஹாசனின் திரையுலக பொன் விழாவை கொண்டாடும் வகையில் விஜய் டிவி சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது:

 இந்த விழா அதிசய விழா, அபூர்வ விழா, திரையுலகமே திரண்டு வந்து கமலுக்கு பாராட்டு விழா எடுக்கின்றது. கமலை பற்றி எல்லோரும் பேசிவிட்டனர். இனி பேச ஒன்றுமில்லை என்று கூறலாம். ஆனால் அது உண்மை இல்லை.

கமலை பற்றி 2 நாட்கள் பேசி கொண்டிருக்கலாம். 1975ல் நான் திரையுலகில் அறிமுகமான போது கமல்ஹாசன் பெரிய நடிகனாக இருந்தார். ஆனால் எந்த ஈகோவும் இல்லாமல் என்னோடு சேர்ந்து நடித்தார்.

பாலச்சந்தர் இயக்கத்தில் மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள், அவர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு மற்ற இயக்குனர்களின் படங்களிலும் சேர்ந்து நடித்தோம். இப்படி 10க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தோம். அப்போது கமல் நினைத்திருந்தால் என்னை போடக்கூடாது என்று சொல்லியிருக்கலாம். அவர் சொன்னதை எல்லா இயக்குனர்களும் கேட்டிருப்பார்கள். ஆனால் பெருந்தன்மையோடு என்னோடு இணைந்து நடித்தார்.

நான் இந்த அளவுக்கு பெரிய நடிகனாக கமலே காரணம்.  நான் அவரை பார்த்துதான்  நடிக்க  கற்றுகொண்டேன். ஒருமுறை படப்பிடிப்பின் போது நான் வெளியே சிகரெட் பிடித்து கொண்டிருந்தேன். அப்போது பாலசந்தர் உள்ளே கமல் நடிக்கிறான் அதை பார்த்து கற்றுக்கொள் என்று திட்டினார்.

பின்னர் ஒரு கட்டத்தில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தால் நீங்கள் முன்னேற முடியாது என்று கமல் என்னிடம் கூறினார். நாம் ஒன்றாக இருந்தாலும் ரசிகர்கள் பிரித்து வைத்து விடுவார்கள். அந்த நிலை உங்களுக்கு வேண்டாம் என்று தெரிவித்தார். அதன் பிறகே நான் தனியே  நடித்தேன்.

நான் தொட்ட விஷயங்களை கமல் தொட்டிருக்கிறார். ஆனால் கமல் தொட்ட விஷயங்களை நான் தொடாமல் நடித்தேன். 
ராஜ்கபூர், திலிப் குமார் போன்ற இந்தி நட்சத்திரங்கள், கமல் இருக்கும்  இடத்தில் இவன் எப்படி இவ்வளவு பெரிய நடிகனாக உயர்ந்தான் என்று வியந்து போயிருக்கின்றனர்.  அந்த அளவுக்கு கமல் சிறந்த நடிகர். நான் அவரால்தான் இந்த நிலையை அடைந்தேன். மோகன்லால், மம்முட்டி மற்றும் என் போன்ற கலைஞர்களை கலைத்தாய் கையை பிடித்து அழைத்து செல்கிறாள்.
ஆனால் கமலை மட்டும் இடுப்பில் வைத்து மார்போடு அணைத்து செல்கிறாள். காரணம் கமல் 10 ஜென்மம் தவமிருந்து நடிப்பு வரத்தை பெற்றிருக்கிறார். எந்திரன் படத்தின் கதை கூட கமலுக்காக உருவானதுதான். நான் கூட ஷங்கரிடம் கமலை மனதில் வைத்து கொண்டு என்னை வேலைவாங்கக்கூடாது என்று கூறினேன். ஒரு சில காட்சிகளில் அதிக டேக் வாங்கும் போது, ஷங்கரிடம் இதையே மீண்டும் நினைவுபடுத்துவேன்.

கமல் வாழ்ந்த காலத்தில் அவரோடு சேர்ந்து நடித்துள்ளேன் என்பதற்கான வரலாற்று பதிவாக இந்த விழா அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினி நட்பு பற்றி கமல்

தானும், ரஜினியும் நண்பர்களாக இருப்பது போல திரையுலகில் வேறு யாரும் இருக்க முடியாது என்று கமல்ஹாசன் கூறினார்.
பாராட்டு விழாவின் நிறைவு விழாவில் ஏற்புரை நிகழ்த்திய கமல் பேசியதாவது:

ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் தேடுகிறார். நான் சமூகத்தில் தேடுகிறேன். ஆனால் நான் நாத்திகன் அல்ல. பகுத்தறிவுவாதி.
சினிமாவுக்கு வரும் போது நான் பல கணக்குகளை போட்டேன். அவற்றில் சில மட்டும்தான் நிறைவேற்றிருக்கின்றன. நான் சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது. வித்தியாசமான படங்களை என்னால் கொடுக்க முடிந்ததற்கு ரசிகர்களே காரணம்.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது அழக்கூடாது, சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டேன். இது இரண்டுமே நடக்கவில்லை.

இங்கு திரையுலக பிரமுகர்கள் அனைவரும் வந்துள்ளனர்.  என் மீதுள்ள அன்பு காரணமாகவே வந்துள்ளனர். அவர்கள் கால்களை தொட்டு வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.மம்முட்டியோடு பேசும் போது  இருவரும் 3 தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறோம். அடுத்த விருது யார் வாங்குகிறோம் பார்க்கலாம் என மம்முட்டி என்னிடம் கூறினார்.

இந்த போட்டியில் நான் ஜெயிப்பேனா என்பது தெரியவில்லை. ஆனால்  நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களை போல திரையுலகில் சிறந்த நண்பர்களாக  வேறுயாரவது விளங்க முடியுமா என்று நான் பதில் சவால் விடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

| |

மற்றவை :