? Maalaisudar

Advertisements




 
 
 
 
 
 

பாப் மன்னனின் எழுச்சியும், வீழ்ச்சிய

.

Friday, 26 June, 2009   11:28 AM
.

 மைக்கேல் ஜாக்சன் எனும் பெயரை அறியாதவர்களே இருக்க முடியாது. இசைப் பிரியர்களை பொறுத்தவரை குறிப்பாக பாப் இசை ரசிகர்களை பொறுத்தவரை மைக்கேல் ஜாக்சன் என்பது மந்திர வார்த்தைதான். அவருடைய குரல் வளமும், அதற்கேற்ப வளைந்து கொடுத்த அவரது நடனத் திறமையும் உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை கட்டிப் போட்டது.

.
மேடையில் தோன்றும் போது ரசிகர்களை மயக்கும் திறன் படைத்த மைக்கேல் ஜாக்சன், வேறு எந்த பாப் பாடகரையும் விட அதிக புகழ் பெற்றவராக விளங்கினார். இசையுலகின் நட்சத்திரமாக உருவான மைக்கேல் ஜாக்சன் பின்னர் சர்ச்சைகளில் சிக்கி அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருடைய செல்வாக்கு பாதிக்கப் பட்டாலும் புகழ் மங்கி விடவில்லை.

காலத்தை வென்ற பாடகராக கருதப்படும் மைக்கேல் ஜாக்சனின் இசைப்பயணம் 5 வயதில் துவங்குகிறது. தன்னுடைய 4 சகோதரர்களோடு சேர்ந்து ஜாக்சன் 5 இசைக்குழுவை துவக்கினார்.  மைக்கேல் ஜாக்சனின் தந்தை பெயர் ஜோ ஜாக்சன். அவருடைய தாய் கேத்ரின். எஃகு நிறுவனம் ஒன்றில் தொழிலாளராக பணியாற்றிய ஜாக்சனின் தந்தை இளம் வயதிலேயே தன்னுடைய மகனின் இசை ஆற்றலை உணர்ந்து கொண்டு ஊக்குவித்தார்.

ஜாக்சனின் குரல் வளமே அவரது இசைக்குழுவை பிரபலமாக்கியது. வாய்ப்புகள் அந்த குழுவை தேடி வந்தன.
உள்ளூரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த சகோதரர்கள் பின்னர் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் பெற தொடங்கினர். பாடகராகவும், நடனக் கலைஞராகவும் விளங்கிய சிறுவன் ஜாக்சனின் வசீகரம் அனைவரையும் கவர்ந்து இழுத்தது.

 10 வயதில் ஆல்பத்திற்கான இசை ஒப்பந்தம் அவரை தேடி வந்தது. அதன் பிறகு அவருடைய இசைக்குழு மேலும் புகழ் பெற்றது.
இசையுலகின் போக்கையே மைக்கேல் ஜாக்சன் மாற்றி அமைத்தார். இசைக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அவர் தனிப்பாடகராக அறிமுகமாகி புகழ் பெற்றார். இதன் மூலம் பரவலான அளவில் புகழ் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பாடகராக அவர்உயர்ந்தார்.

ஜாக்சன் பாடிய தனிப்பாடல்கள் புகழ் பெற்றதோடு, அவற்றோடு இணைந்த அவரது நடனமும் ரசிகர்களை கவர்ந்தது.
பீட் இட், பில்லி ஜீன் போன்ற தனிப்பாடல்கள் எங்கும் ஒலிக்க தொடங்கின. ஜாக்சன் எழுச்சி பெற தொடங்கிய காலத்தில்தான் எம் டிவி அறிமுகமானது. ஜாக்சனால் எம் டிவியும், எம். டிவியால் ஜாக்சனும் புகழ் பெற்றன.

இது பாடல்களோடு இணைந்த வீடியோவை ஒளிபரப்பும் கலாச்சாரம். ஜாக்சன், எம் டிவி கூட்டணியால் பிரபலமானது. இதன் மூலம் மைக்கேல் ஜாக்சன் கோடிக் கணக்கான டாலர்களை ஈட்டினர். எம் டிவி மூலம் மைக்கேல் ஜாக்சன் அமெரிக்கா மட்டுமல்லாமல் அகில உலகம் முழுவதும்அறியப்பட்டவர் ஆனார். 1982ல் வெளியான திரில்லர் ஆல்பம் இசையுலகில் அவரை முடிசூடா மன்னனாக்கியது.

1984ல் கிராமிய விருதுகள் அவரை தேடி வந்தன. அவர் பாடிய ஒவ்வொரு தனிப்பாடலும் புகழ் பெற்றன. இதன் காரணமாக இசையுலகம் ஆல்பத்தை தயாரித்து சந்தைப்படுத்திய விதமே மாற்றம் அடைந்தது. பாப் உலகில் மைக்கேல் ஜாக்சனின் முத்திரை அழுத்தமாக பதிக்கப்பட்டது.

மைக்கேல் ஜாக்சனை பின்பற்றி நூற்றுக்கணக்கான பாப் பாடகர்கள் உருவானார்கள். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர். ஜாக்சனின் இசைப்பயணம் இப்படியே தொடர்ந்திருந்தால் எத்தனை இனிமையாக இருந்திருக்கும். ஆனால் அவருடைய பாதை மாறி சர்ச்சை காற்று வீசத் தொடங்கியது.

1984 ஆம் ஆண்டு பெப்சி விளம்பரம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய முகத்தில் தீக்காயம் ஏற்பட்டதை அடுத்து இந்த மாற்றம் உண்டானது. இந்த சம்பவத்தை அடுத்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் அனுதாபம் உண்டாகி அவருக்கு நஷ்டஈடாக 1.5 கோடி டாலர்கள் கிடைத்தது. இந்த தொகையை நன்கொடையாக வாரி வழங்கினார் ஜாக்சன்.

ஆனால் அவருடைய உடல்நிலை குறித்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆர்வம் கொள்ள தொடங்கியதை அடுத்து ஜாக்சனின் பழக்க வழக்கங்களும் மாறியது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னுடைய முகத்தை மாற்றி அமைத்துக் கொண்ட அவர், செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக ஸ்டண்டுகளில் ஈடுபட்டார். தன்னுடைய தோலை பிளிச்சிங் செய்து கொண்டு தோற்றத்தை மாற்றிய வண்ணம் இருந்தார்.

இந்த காலத்தில்தான் அவருடைய தோலின் ஆரோக்கியமும் பாதிக்கப் பட்டது. ஜாக்சன் பற்றி பலவிதமான வதந்திகள் உலா வரலாயின. பிராண வாயு அறையில் படுத்து உறங்குவதாக பொய்த் தகவலை வெளியிட்டு ஜாக்சனே இதற்கு வித்திட்டார். பின்னர் அவர் சர்ஜிகள் மாஸ்க் அணிந்து காணப்பட்டார். சிம்பன்சி குரங்கு ஒன்றை செல்லப் பிராணியாக வைத்திருந்தார். தன்னுடைய பண்ணை வீட்டில் சிறுவர்களை ஊக்குவித்தார். அவரை வாக்கோ ஜாக்கோ என செல்லமாக பத்திரிகைகள் அழைக்க தொடங்கின.

1988ல் வெளியான "மூன்வாக்' சுயசரிதையில் தன்னை பற்றி பல விஷயங்களை ஜாக்சன் தெளிவுபடுத்தியிருந்தார். 1993ம் ஆண்டு 13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தியதாக ஜாக்சன் மீது குற்றஞ்சாட்டப்பட்ட போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் அவரது செல்வாக்கும் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்குள்ளானார்.
பல ஆண்டு நீடித்தஇந்த வழக்கு காரணமாக ஜாக்சனின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஜாக்சன் பற்றி எதிர்மறையான செய்திகளே அதிகம் வெளியாகின. இந்த வழக்கில் கைதாகி விடுதலையானார். மேலும் பஹ்ரைன் மன்னரின் 2வது மகன் அவர் மீது வழக்கு தொடுத்தார். வழக்குகளால் ஏற்பட்ட செலவுகளை அடைக்க அவர் பெருமளவில் கடன் பட்டார். இசையுலகின் சிகரத்தை தொட்டு பின்னர் சர்ச்சைகளால் சரிந்த மைக்கேல் ஜாக்சனை இசையுலகம் என்றென்றும் நினைவில் நிறுத்தியிருக்கும்.
| |

?????? :