.
 
 
 
 
 
 

ஒரேநாளில் 1500 பேர் படுகொலை

.

Tuesday, 21 April, 2009   03:41 PM
.
கொழும்பு, ஏப்.21: வன்னியின் பாதுகாப்பு வளையப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் ஒரே நாளில் 476 சிறுவர்கள் உள்ளிட்ட 1496 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
.
மூச்சுத்திணறல் ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும் ஒரு வகையான புகைக்குண்டுகளாலும் பிடிபட்ட மக்களை பணய கைதிகளாக முன்னிறுத்தியும் இந்த கொடூர கொலைவெறி தாக்குதலை இலங்கை ராணுவம் நிகழ்த்தி யுள்ளது.
வன்னியின் பாதுகாப்பு வளையப் பகுதியில் இருந்து வெளியேறிச் சென்று நேற்று முன்தினம் இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை பணய கைதிகளாக முன்னிறுத்தி இலங்கை ராணுவத்தினர் நேற்று அதிகாலை முதல் கொடூர கொலைவெறி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மாத்தளன் என்ற இடத்திலிருந்து தொடங்கி அம்பலவான் பொக்கானை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதி களில் பொதுமக்களை நேரடி யாகவே இலக்கு வைத்து பீரங்கி குண்டுகள், கொத்து வெடி குண்டுகள், கனரக மற்றும் தொலைதூர துப்பாக்கிகளைக் கொண்டும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியும் மிகமோசமான தாக்குதல்களை இலங்கை ராணுவம் நடத்தியது.

இதில் நேற்று ஒரே நாளில் 476 சிறுவர்கள் உள்ளிட்ட 1496 அப்பாவி தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் 3 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இலங்கை ராணுவம் ஏவிய ஒருவகையான புகைக்குண்டுகளால் ஏராளமான தமிழர்கள் மூச்சுத்திணறி இறந்துள்ளனர். அத்துடன் மற்றொரு வகையான குண்டுகள் விழுந்து வெடித்த இடங்களில் தீப்பற்றி எரிந்ததால் பலர் உடல் கருகி கொல்லப்பட்டனர். மேலும் மக்கள் வாழ்ந்த கூடாரங்கள், கொட்டில்களும் எரிந்து நாசமாயின.

தாக்குதல் நடந்த பகுதிகளில் ஏராளமான கொலையுண்ட தமிழர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன.  பாதுகாப்புக்காக மக்கள் ஓடிப் பதுங்கிய அகழிகளிலும் குண்டுகள் விழுந்து வெடித்ததாலும் பெருமளவிலான மக்கள் அவற்றின் உள்ளேயே கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களும் தொடர்ந்து இறந்து வருகின்றனர்.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் பகுதிகளுக்கு கொண்டு வரப் படுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இத்தகவல்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஒரு இணைய தளத்தில் வெளி யிடப்பட்டுள்ளன.
| |

?????? :