.
 
 
 
 
 
 

96 தமிழர்கள் படுகொலை

.

Tuesday, 24 March, 2009   11:45 AM
.
கொழும்பு / நியூயார்க், மார்ச் 24: இலங்கை ராணுவம் நடத்திய கொடூர குண்டு வீச்சு தாக்குதலில்  19 குழந்தைகள் உள்ளிட்ட 96 தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். கடும் போர் நீடித்து வரும் இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வளையம் என்று அறிவித்த பகுதிகளிலும்  அப்பாவி தமிழர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
.
இதனால் அன்றாடம் ஏராளமான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு வரும் கொடூரம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.  அந்த வகையில் நேற்றும் பாதுகாப்பு வளையம் என்று அரசால் அறிவிக்கப்பட்ட முல்லைத்தீவின் புதுமத்தாளன் பகுதியில் இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தியது.

பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால்  நடத்தப்பட்ட இந்த  மிக மோசமான தாக்குதலில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 96 தமிழர்கள் கொல்லப் பட்டனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 32 தமிழர்கள் கொல்லப்பட்டனர். மொத்தம் சுமார் 160 பேர் படுகாயம் அடைந்தனர் என்று உள்ளூர் தொண்டு நிறுவன ஊழியர்களும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

புதுமத்தாளன் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீதும்  தாக்குதல் நடத்தப்பட்டு 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர். பொக்கானை என்ற இடத்தில் ராணுவ தாக்குதலுக்கு 16 தமிழர்கள் பலியாகினர் என்று தகவல்கள் கூறுகின்றன.

2 மாதத்தில் 3000 பேர் பலி
இதனிடையே, பாதுகாப்பு வளைய பகுதிகளில் இலங்கை ராணுவம் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி அப்பாவி தமிழர்களை படுகொலை செய்து வருவதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 மாதத்தில் மட்டும் 2700 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி உள்ள அந்த அமைப்பு, நாள்தோறும் உயிரிழப்பு களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு  அதன்  ஆசிய இயக்குனர் பிராடு ஆடம்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்கள் தினந்தோறும் படுகொலை செய்யப்பட்டு வருவதை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இலங்கை அரசு இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார். புதுமத்தாளன் மருத்துவமனை டாக்டர் ஒருவர்  நேற்று இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், ராணுவ தாக்குதலில் காயமடைவோர் அன்றாடம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதாகவும் தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாகவும் ஆடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
| |

?????? :