Advertisements




 
 
 
 
 
 

ரெயில்வே பட்ஜெட்டில் சலுகைகள்?

.

Sunday, 08 February, 2009   02:12 PM
.
புதுடெல்லி, பிப்.8: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கு மேலும் பல சலுகைகளை ரெயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் அறிவிப்பார் என்று தெரிகிறது.
.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சர்வதேச அளவிலான விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு இடையிலும், ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 5 ஆண்டுகளாக தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

இந்த நிலையில் இம்மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த இடைக்கால ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கு மேலும் பல்வேறு சலுகைகளை லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பார் என்று தெரிகிறது.

அத்துடன் "கரீப் ரதங்கள்' எனப்படும் மேலும் பல புதிய ஏழைகளின் ரெயில்களும் அறிமுகப் படுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே உணவுப் பொருட்கள் மற்றும் உரங்கள் மீதான சரக்குக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுவிட்ட தால் சரக்குக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

புதிய ரெயில்கள் அறிமுகம் மட்டுமின்றி ஏழைகளுக்கு ஆதரவான மேலும் பல புதிய திட்டங்களும் இந்த இடைக்கால ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் லெவல் கிராசிங்குகளில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சில குறிப்பிட்ட இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் கட்டுவது பற்றிய அறிவிப்புகளும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரெயில் பெட்டிகள், பயணிகளுக்கு தரமான உணவு வழங்குவதற்கான சமையலறைகள் செயல்பாடு ஆகியவை பற்றிய பல்வேறு புதிய அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

புனே  மும்பை  அகமதாபாத் மார்க்கத்தில் புல்லட் ரெயிலை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியகூறு ஆய்வு, சரக்கு ரெயில்வே பாதைக்கான முதல்கட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்குவது, 100 ரெயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்  எனப்படும் மின்தூக்கி வசதி அறிமுகப்படுத்துவது ஆகியவை பற்றிய அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
| |

மற்றவை :