Home » சினிமா » நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும்: பரோட்டா சூரி

நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும்: பரோட்டா சூரி

Arrow
Arrow
Shadow
ArrowArrow
Slider

நடிகை நயன்தாராவுடன் டூயட் பாட ஆசை என நடிகர் பரோட்டா சூரி கூறியுள்ளார்.
முன்னணி காமெடி நடிகரான சூரி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1996-ம் ஆண்டு மதுரைக்கு பக்கத்தில் உள்ள கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்தேன். இங்கு தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் பணம் வேண்டும் என்பதால் சினிமாவில் ஆர்ட் டிபார்ட்மெண்டில் பெயிண்டராக வேலை செய்தேன்.  பிறகு ஜவுளிக்கடைகள், பெரிய நிறுவனங்களுக்கும் பெயிண்டராக வேலை பார்த்தேன். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து காமெடி நாடகம் போடுவேன்.

விநாயகர் சதுர்த்தி அன்று வீரப்பன் கதையை மையமாக வைத்து ஒரு காமெடி நாடகம் போட்டேன். நாடகத்தை பார்த்த ஒரு பெண் போலீஸ் எனக்கு பணம் கொடுத்து பாராட்டினார். அதற்கு பிறகு காதல், தீபாவளி, ஜீ ஆகிய படங்களில் சிறிய காட்சிகளில் நடித்தேன். தீபாவளி படத்தின் உதவி இயக்குனராக இருந்த சுசீந்திரன் வெண்ணிலா கபடிக்குழு படத்தை எடுத்த போது எனக்கு வாய்ப்பு கொடுத்தார். முதலில் சின்ன வேடமாக இருந்ததை பின்னர் பெரிதாக்கினார்.

அதில் இடம்பெற்ற பரோட்டா காமெடி என்னை பிரபலப்படுத்தியது. தொடர்ந்து நிறைய காமெடி படங்களில் நடித்து வருகிறேன். சமீபத்தில் வந்த வேலைன்னு வந்தா வெள்ளக்காரன் படத்தில் இடம் பெற்ற புஷ்பா புருஷன் காமெடி, பரோட்டா காமெடியை பின்னுக்கு தள்ளிவிட்டது.  ஒரு படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அவங்க சம்மதிக்க வேண்டுமே! இதை கேள்விப்பட்டு கேஸ் போடாம இருந்தா சரிதான். மற்ற படி எனக்கு ஹீரோ ஆசை எல்லாம் இல்லை. காமெடி வண்டியே நல்லாதான் போய் கொண்டிருக்கிறது.

படப்பிடிப்பு தளத்திலும் டப்பிங்கிலும் என் காமெடி டயலாக்கை மேலும் மெருகேற்றுவதுதான் என் ஸ்டைல். சில நண்பர்கள் இப்போது என் காமெடி சீன்களுக்கு உதவுகிறார்கள். என்னுடைய காமெடி ரோல் மாடல் என் அப்பாதான். அவரின் காமெடியில் 10 சதவீதத்தை கூட நான் செய்யவில்லை. அவர் அவ்வளவு நகைச்சுவையான மனிதர்.

கதாநாயகர்களுடன் படத்தில் முழுவதுமாக வரவேண்டி உள்ளதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*