Home » Flash News » 3 ஆம்னி பஸ் பறிமுதல்

3 ஆம்னி பஸ் பறிமுதல்

சென்னை, ஆக.12: நான்கு நாள் தொடர் விடுமுறை வருவதால் சொந்தஊர் செல் பவர்களிடம் ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை நடைபெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து அமைச்சர் நள்ளிரவில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தார். இதன் விளைவாக 11 பஸ்களில் வசூலிக்கப்பட்ட அதிக கட்டணம் பயணிகளுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. 3 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சனி, ஞாயிறு வார விடுமுறை, கிருஷ்ணஜெயந்தி, சுதந்திரதினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வருவதால் சென்னையில் தங்கி உள்ள வெளியூர்வாசிகள் நேற்று முதல் சொந்த ஊர் செல்லத் தொடங்கி உள்ளனர். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் இரட்டிப்பு கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நள்ளிரவு 10 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் அதிரடி ஆய்வு நடத்தினார்.

அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டாலும் ஆம்னி பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க போக்குவரத்து துறை அமைச்சர்கள் தலைமையில் அதிகாரிகள் கோயம்பேடு, எழும்பூர், தாம்பரம், பெருங்களத்தூர், செங் குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி தலைமையில் ஆய்வாளர்கள் ஜெய் கணேஷ், ராஜாமணி ஆகியோர் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் ஒவ்வொரு பஸ்களிலும் ஏறி பயணிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

வழக்கமான கட்டணத்தைவிட அதிகமாக கொடுத்து பயணம் செய்கிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு பயணிகள் எல்லோரும் ரூ.500 முதல் ரூ.1000 வரை கூடுதலாக கொடுத்துதான் பயணம் செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அதிகமாக வசூலித்த கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி கொடுக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

பயணிகளின் பயணம் பாதிக்கப்படாத வகையில் அதே பஸ்சில் தொடர்ந்து பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டது. 11 ஆம்னி பஸ்களில் அதிகமாக வசூலித்த கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி கொடுத்தனர். கூடுதலாக வாங்கிய கட்டணம் தங்களுக்கு திரும்ப கிடைத்தது மகிழ்ச்சியில் பயணம் செய்தனர். அதிகாரிகளின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் தாமதமாக புறப்பட்டு சென்றது.
மேலும் அதிக கட்டணம் வசூலித்ததாக 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோயம்பேடு, வளசரவாக்கம், குன்றத்தூர் பகுதியில் நடந்த  சோதனையில் தகுதிச்சான்று, பர்மிட் இல்லாமல் பஸ்களை இயக்கியது தெரிய வந்தது. இன்றும் அதிரடி  சோதனை நடந்து வருகிறது.

அதே போல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் புறப்பட்டனர். அந்த வேளையில் கடுமையான மழை பெய்ய தொடங்கியது இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதை அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  ஒவ்வொரு பகுதியிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைவதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஆனது. இதனால் கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

சுமார் 3 மணி நேர தாமதத்திற்கு பிறகு ஒவ்வொரு பேருந்தாக புறப்படத் தொடங்கியது. இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டியவர்கள் நள்ளிரவு 1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.  அதே போல் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பி வரும் பொதுமக்களும் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*