Home » Flash News » இரட்டை இலையை எங்களுக்கு ஒதுக்குக: ஒபிஎஸ் புதிய மனு

இரட்டை இலையை எங்களுக்கு ஒதுக்குக: ஒபிஎஸ் புதிய மனு

புதுடெல்லி, ஆக.12: தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 7 லட்சம் ஆவணங்களும் போலி என்பதால் அவற்றை நிராகரித்து விட்டு இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சின்னம் தங்களுக்கே சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை அதிமுக அம்மா அணி, புரட்சித்தலைவி அம்மா அணி ஆகிய இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர். பல லட்சம் கொண்ட இந்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இந்தநிலையில் டிடிவி தினகரனுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்னொரு அணி உருவாகி இருப்பதால் தினகரன் தரப்பினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் எடப்பாடி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் இணைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நேற்று தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தினகரனின் துணை பொதுச் செயலாளர் பதவி செல்லாது என்று எடப்பாடி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை சுட்டிக்காட்டியும், தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானது என்ற அடிப்படையில் அவற்றை டிஸ்மிஸ் செய்து விட்டு இரட்டை இலையை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வி.மைத்ரேயன் எம்.பி. கூறுகையில், சசிகலாவை துணைப் பொதுச் செயலாளராகவும், டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராகவும் நியமித்தது சட்டவிரோதம் என்பதை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்துள்ளது. எனவே தினகரன் தரப்பு வாதங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கக்கூடாது என்றார்.
டெல்லியில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முகாமிட்டிருந்த நிலையில், ஓபிஎஸ் அணியினர் இந்த மனுவை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருப்பது இணைப்புக்கான வாய்ப்பை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கே.பி.முனுசாமி, மாபா பாண்டியராஜன், மைத்ரேயன் ஆகியோர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து விட்டு வெளியே வந்த போது தங்கள் தரப்பில் புதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் சசிகலாவின் நியமனத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.
கே.பி.முனுசாமி கூறுகையில், ஈபிஎஸ் அணி தரப்பில் எங்களுக்கு எதிராக தாக்கல் செய்த அபிடவிட் விரைவில் வாபஸ் பெற இருப்பது இணைப்புக்கு வழிவகுத்து உள்ளது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*