Home » உலகம் » லண்டனில் பற்றி எரியும் 27 மாடி கட்டிடம்

லண்டனில் பற்றி எரியும் 27 மாடி கட்டிடம்

 

Arrow
Arrow
Shadow
ArrowArrow
Slider

லண்டன், ஜூன் 14:இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்குப் பகுதியில் உள்ள 27 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 1974ல் கட்டப்பட்ட கட்டடம் தீயில் கருகி இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லண்டன் வொயிட் சிட்டி, லத்திமர் சாலையில் கிரன்ஃபெல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. மொத்தம் 27 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவிய தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் பிடித்த தீ கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியும் நிலையில் தீயை அணைக்கும் பணியில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 200 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதன் ட்விட்டர் பக்கத்தில், மேற்கு லண்டனில் உள்ள கிரென்ஃபெல் டவரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேல் தளத்திலிருந்து 2வது தளத்தில் தீ பற்றியிருக்கிறது. அது மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அந்தக் கட்டிடத்தில் 120 பிளாட்டுகள் உள்ளன. விபத்துப் பகுதியிலிருந்து இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது எனத் தெரிவித்துள்ளது.

கிரென்ஃபெல் டவர் கடந்த 1974-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை வெப்பம் உணரப்படுவதாக அந்த பகுதியில் இருப்பவர்கள் கூறியிருக்கின்றனர். கிரென்ஃபெல் கட்டிடத்தில் 6 மணி நேரமாக தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. கட்டிடத்துக்குள் எத்தனை பேர் சிக்கியிருக்கின்றனர் என்பதை இதுவரை உறுதி செய்யமுடியவில்லை.

ஆனால், தீ பிடித்தவுடன் கட்டிடத்தில் இருந்து உதவிக்குரல்கள் ஒலித்ததாக கட்டிடத்தின் எதிர்புறத்தில் உள்ள வீட்டில் குடியிருப்பவர்கள் கூறியிருக்கின்றனர். தங்கள் உறவுகளைத் தேடி சம்பவப் பகுதிக்கு பலரும் வந்தவண்ணம் உள்ளனர். இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் கதவு, ஜன்னல்களை பூட்டிவைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தினுள் ஏற்பட்ட தீயை முழுவதுமாக அணைத்த பிறகே உயிர் இழப்பு மற்றும் இதர சேத விவரங்கள் குறித்த விபரங்கள் தெரிய வரும் என்பதால், தற்போது லண்டன் நகரமே பரபரப்பில் மூழ்கியுள்ளது.இந்த பயங்கர தீவிபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*