Home » அரசியல் » சசிகலாவுடன் பேசி அடுத்த நடவடிக்கை: ஆதரவு எம்எல்ஏக்கள் பேட்டி

சசிகலாவுடன் பேசி அடுத்த நடவடிக்கை: ஆதரவு எம்எல்ஏக்கள் பேட்டி

சென்னை, ஆக.10: எடப்பாடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானங்கள் எதுவும் செல்லாது என்றும் சசிகலாவை கலந்து பேசி அடுத்த நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் கூறியுள்ளனர்.

ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியதாவது:-

தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது. அதிமுக விதிமுறைகளின்படி இந்த கூட்டம் நடைபெறவில்லை என்பதால் இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது. பொதுச் செயலாளர் சசிகலாவையும், துணை பொதுச் செயலாளர் தினகரனையும் நீக்குவதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. நாங்கள் பொதுச் செயலாளரை கலந்து பேசி அடுத்த நடவடிக்கையில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சியின் விதிமுறைகளை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. பொதுச்செயலாளர் சசிகலாவின் பதவி செல்லாது என்றால் அவரால் நியமிக்கப்பட்ட பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அவைத்தலைவர் செங்கோட்டையன் போன்றவர்களின் பதவியும் செல்லாது என்று அறிவித்திருக்க வேண்டியதுதானே.

அதை செய்யாமல் இவர்கள் நிறைவேற்றும் தீர்மானம் எதுவும் யாரையும் கட்டுப்படுத்தாது. முதல்வராக இருப்பவர் ஆட்சியை பற்றிதான் முடிவெடுக்க முடியும். கட்சியில் எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியாது என்றார்.

நாஞ்சில் சம்பத் கூறுகையில், சட்டவிரோதமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானங்கள் வரலாற்று குப்பை தொட்டியில் தூக்கி வீசப்படும்.

அதிமுக கடந்த காலங்களில் பல துரோகிகளை சந்தித்துள்ளது. இந்த துரோகிகளையும் நாங்கள் சந்திப்போம். பொதுச் செயலாளருடன் கலந்து பேசி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*