Home » சினிமா » ‘காலா’ பட வழக்கு: ஒரு வாரத்தில் ரஜினி, ரஞ்சித் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

‘காலா’ பட வழக்கு: ஒரு வாரத்தில் ரஜினி, ரஞ்சித் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

‘காலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் | கோப்புப் படம்

‘காலா’ பட வழக்கு தொடர்பாக ஒரு வாரத்தில் ரஜினி, ரஞ்சித் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் காலா. மும்பை தாராவியில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் காலா படம் கரிகாலன் என்ற அடைமொழியுடன் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜசேகர் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ”ஏப்ரல் 1996-ல் கே.ராஜசேகர் (எ) கே.எஸ்.நாகராஜா என்கிற நான் என்னுடைய படைப்பான ‘மயிலேகுயிலே’ இசை வெளியீட்டு விழாவில் ‘கரிகாலன்’, ‘உடன்பிறவாதங்கச்சி’ ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன்.

‘கரிகாலன்’ என்ற தலைப்பு கதையின் மூலக்கரு முழுவதும் என்னுடைய உருவாக்கம். ‘கரிகாலன்’ தலைப்பு மற்றும் கதையை சில்வர் லைன் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் விக்ரமை வைத்துப் படத்தை தொடங்கி காட்சிகள் வெளியானதை எதிர்த்து உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள சிவில் கோர்ட்டில் வழங்கு தொடரப்பட்டு படத்தை மேற்கொண்டு எடுக்க நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து என்னுடைய ‘கரிகாலன்’ திரைக்கதையை பல சினிமா நிறுவனங்களின் தயாரிப்பாளர்களிடமும் சொல்லிவந்தேன். இந்நிலையில் பல நாளிதழ்களில் ரஜினிகாந்தை வைத்து தனுஷ் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் ரஞ்சித் படத்தை இயக்கப் போவதாகவும் அந்த படத்தின் பெயர் ‘காலா கரிகாலன்’ என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

‘கரிகாலன்’ படத் தலைப்பு எனக்கு சொந்தமானது என்பதால் ‘காலா’ படம் ‘கரிகாலன்’ என்ற அடைமொழியுடன் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து ஒரு வாரத்தில் ரஜினி, ரஞ்சித் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*