Home » சினிமா » டெம்போ வேனின் பின்னணியில் உருவான தங்கரதம்

டெம்போ வேனின் பின்னணியில் உருவான தங்கரதம்

என்டிசி மீடியா, விகேர் நிறுவனம் சார்பில் சி.எம்.வர்கீஸ், பினுராம் இணைந்து தயாரித்துள்ள படம் தங்கரதம். இப்படத்தை பாலமுருகன் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் ஜெகனிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் கதாநாயகனாக வெற்றி நடித்துள்ளார். இவர் 300க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் மாடலாக நடித்தவர். பா.விஜய் நடித்த ஸ்டாபெரி படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்தவர். கதாநாயகியாக அதிதி கிருஷ்ணா நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், சௌந்தரராஜன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜோசப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்ய, டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 16-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் பற்றி இயக்குனர் பாலமுருகன் கூறியதாவது:-

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் 2 டெம்போக்களுக்கு இடையே நடைபெறும் போட்டியே படத்தின் கதை ஆகும். தங்கரதம் டெம்போவில் கதாநாயகன் வெற்றியும், பரமன் டெம்போவில் சௌந்தரராஜனும் நடிக்கின்றனர். 2 டிரைவர்கள் மற்றும் கிளீனர்களுக்கு இடையே நடக்கும் மோதல், காதல் ஆகியவற்றை மண் சார்ந்த வகையில் கொடுத்துள்ளோம். எனது சொந்த ஊர் ஓட்டன்சத்திரம் என்பதால் ஒரு வாரத்திற்கும் மேலாக மார்க்கெட்டில் படப்பிடிப்பு நடத்தினோம்.

மேலும் இதுவரை பார்த்திராத கோணத்தில் பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளை படமாக்கி இருக்கிறோம். நாகர்கோயில் வள்ளியூர் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். அதிதி கிருஷ்ணா கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். இந்த கதையை ஷங்கர் உள்ளிட்ட பலபேர் கேட்டு தயாரிக்க முன்வந்தனர். இருப்பினும் தயாரிக்க முடியவில்லை.

வர்கீஸ் படத்தை தயாரித்துள்ளார். எதிர்பார்த்தது போல படம் அற்புதமாக வந்துள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் எந்த காட்சியையும் நீக்காமல் ‘யு’
சான்று அளித்துள்ளனர். மொட்ட ராஜேந்திரனுக்காக நானொரு பாடலை எழுதி உள்ளேன். அதில் அவருடன் இணைந்து டிஸ்கோ சாந்தியின் சகோதரி சுசித்ரா நடித்துள்ளார். படத்தை சத்தியம் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர். வரும் 16-ந் தேதி படம் வெளியாக உள்ளது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*