சேலம், ஜூன் 5:பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாரியப்பன் மீது, ரெயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் தந்தை திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். தனது மகன் சாவிற்கு மாரியப்பன், அவரது தாய், நண்பர்களே காரணம் என அவர் கூறியுள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சேலம் மாவட்டம், ஒமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ரியோவில் கடந்த 2016-இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார்.இந்நிலையில் மாரியப்பன் ரூ.27 லட்சத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது.
சாலையில் இருந்த அந்த காரை அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது26) என்பவர் தன் பைக்கில் இடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட மாரியப்பனும், அவரது நண்பர்களும் தட்டி கேட்டதோடு வீடு புகுந்து சேதத்துக்கு உண்டான செலவை தருமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதற்கு சதீஷ்குமார் வண்டி சேதத்திற்காகும் செலவை தான் ஏற்பதாக கூறியும் அவரிடம் இருந்த செல்போனை மாரியப்பனும், நண்பர்களும் பறித்து சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர் சதீஷ்குமாரை காணவில்லை என்றும் இந்நிலையில் பெரியவடகம்பட்டி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில்
சதீஷ்குமார் சடலமாக கிடந்தார்.இவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ள அவரது தந்தை மூர்த்தி, இது தொடர்பாக மாரியப்பன், அவரது தாய் சரோஜா மற்றும் நண்பர்கள் மீது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.