w
Home » அரசியல் » தடுப்பணைகளை தடுப்போம்: சட்டசபையில் முதல்வர்

தடுப்பணைகளை தடுப்போம்: சட்டசபையில் முதல்வர்

சென்னை, பிப்.12: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டுவதை தடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். சட்டசபையில் இது குறித்து கொண்டு வரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் கூறியதாவது:-
1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன் மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப் பகுதியிலுள்ள மாநிலங்களின் முன்அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும்,  நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.

சித்தூர் மாவட்டத்தில், குப்பம் எனும் பகுதியில், பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரா அரசு கட்ட உள்ளதாக செய்தி தாள்களில் 4.1.2006 அன்று தகவல்கள் வெளிவந்தபோது, 5.1.2006 அன்றே, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 1892ம் ஆண்டைய ஒப்பந்தத்தை சுட்டி காட்டி, ஆந்திர அரசு அணைகட்டும் பணியினை மேற்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வராதநிலையில், தமிழ்நாடு அரசு 10.2.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இதையடுத்த அணைக்கட்டும் பணிகள் தடுக்கப்பட்டன.  இந்த வழக்கில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு சாட்சியாளர்களின் குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தால் இவ்வழக்கு வரும் ஜுலை மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  ஆந்திர அரசு, பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள தடுப்பணையின் உயரத்தை தன்னிச்சையாக உயர்த்தியுள்ளதாக செய்தி வந்தவுடன், 1.7.2016 அன்று உடனடியாக ஆந்திர முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆந்திர அரசின் இத்தகைய செயல் 1892ம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் எனவும், உயர்த்தப்பட்ட தடுப்பணையின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும், கூடுதலாக நீரை தேக்கி வைக்காமல் இருக்கவும், மற்றும் இயற்கையாக தமிழ்நாட்டிற்குள் வரக்கூடிய நீரை உறுதிப்படுத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கவும் ஜெயலலிதா கேட்டுகொண்டார். இதுகுறித்து மத்திய அரசுக்கும் ஆந்திர அரசுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இது தொடர்பாக 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது.

மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 7.5.2018 அன்று பாலாறு பிரச்சனை குறித்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. பாலாற்றின் குறுக்கே சம்மந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவு பெறாமல் புதிய தடுப்பணைகளை கட்டுவதற்கு முனையக்கூடாது எனவும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்தக்கூடாது எனவும், மத்திய நீர் வள ஆதார துறை செயலாளர் இக்கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார். மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும், எனவும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்பிற்காக 41.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதாக செய்தித் தாள்களில் தகவல்கள் வெளியானது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 13.11.2018 அன்று ஆந்திர அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், தடுப்பணைகளுக்கான விவரங்களை தமிழ்நாட்டின் பரிசீலனைக்காக அளிக்க வேண்டியும் மற்றும் தமிழ்நாடு அரசு அதன் கருத்துக்களை அளிக்கும் வரையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், மத்திய அரசினையும், இதுகுறித்து ஆந்திர அரசுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆந்திர அரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ பதில் ஏதும் வரப்பெறாத நிலையில், பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் கூடுதலாக மனு ஒன்றை 19.11.2018 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட உத்தேசித்திருப்பதாக 5.2.2019 அன்று செய்தி வந்ததையடுத்து, இத்தடுப்பணைகள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது எனவும், உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தடுப்பணைகள் கட்டப்படக்கூடாது எனவும், அவ்வரசின் நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுரை வழங்குமாறு 6.2.2019 அன்று ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பாலாறு நதிநீர் பிரச்சனையில், இந்த அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும், சட்டரீதியாகவும், பிரச்சனையை தொடர்ந்து அணுகி வருகிறது என்றும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*