Home » விளையாட்டு » ஆஸ்திரேலியா – நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது

பிர்மிங்காம், ஜூன் 3:  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா – நியூசிலாந்து  அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக குப்தில், ரோஞ்சி களமிறங்கினர். ஆட்டத்தின் 6-வது ஓவரில் 40 ரன்களை சேர்த்திருந்த நிலையில் குப்தில் ஹாசில்வுட் பந்துவீச்சில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் 46 ஓவர் ஆட்டமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து ஆட வந்த வில்லியம்சன் ரோஞ்சியுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இதனால் அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. அணியின் எண்ணிக்கை 117 ரன்களாக இருந்த போது, ரோஞ்சி  (65 ரன்கள்) ஹேஸ்டிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அபாரமாக ஆடிய வில்லியம்சன் செஞ்சரி அடித்து ரன் அவுட் ஆனார். டெய்லர் 46 ரன்கள் எடுத்தார். இதன் பின்னர் நியூசி அணி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் ஹாசில்வுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 45 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்களை எடுத்தது.
இதனை தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி போட்டி 33 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக பிஞ்ச், வார்னர் களமிறங்கினர். இதில் போல்ட் பந்துவீச்சில் வார்னர் 18 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.  தொடர்ந்து பிஞ்ச் 8 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஹென்ரிக்ஸ் 18 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஸ்மித் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலியா இக்கட்டான நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களுடன் இருந்த போது  மீண்டும் மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து போட்டி இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*