Home » சினிமா » ‘ரங்கூன்’ பட நாயகி சிம்ரன் இடத்தை பிடிப்பார்: ஏ.ஆர்.முருகதாஸ்

‘ரங்கூன்’ பட நாயகி சிம்ரன் இடத்தை பிடிப்பார்: ஏ.ஆர்.முருகதாஸ்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரங்கூன்’. கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகி சனா, ஃபாக்ஸ் ஸ்டார் சிஇஓ விஜய் சிங், படத்தின் இசையமைப்பாளர்கள் விஷால் சந்திரசேகர் மற்றும் விக்ரம், நடன அமைப்பாளர் சதிஷ், சண்டைப்பயிற்சியாளர் அன்பறிவு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் கூறுகையில், ‘இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தை போட்டுக் காட்டினார், படத்துக்கு பின்னணி இசை அமைக்க சொன்னார். கூடவே படத்தில் 2 பாடல்களுக்கும் இசையமைத்தேன், அவை இரண்டும் படத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் வரும் பயணத்தை பின்னணி இசையின் மூலம் நகர்த்தியிருக்கிறேன். பர்மீஷ் மொழி பாடல் வரிகளையும் உபயோகப்படுத்தி இருக்கிறோம்’ என்றார்.
இயக்குனர்  ராஜ்குமார் பெரியசாமி பேசுகையில், ஏ.ஆர்.முருகதாசுக்கு உதவி இயக்குனர்கள் தான் குடும்பம். உதவி இயக்குனர்களுக்கு என்ன உதவி என்றாலும் முதல்ல வந்து நிற்பவர். அவரிடம் வேலை செய்தால் படம் இயக்கி விடலாம். கௌதம் கார்த்திக் தன் எல்லைகளில் இருந்து வெளியே வந்து ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்தாலும், படத்தின் உண்மைத் தன்மைக்காக கடுமையாக மெனக்கெட்டிருக்கிறோம்’ என்றார்.
பின்னர் ஏஆர் முருகதாஸ் பேசியதாவது:-
சிலர் உதவி இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப் படுவார்கள், ஒரு சிலர் இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். ராஜ்குமார் இரண்டுக்குமே ரொம்ப கஷ்டப்பட்டார். புதுப்புது இடங்களாக தேடித்தேடி, திரையில் தான் நினைத்ததை கொண்டு வர ரொம்பவே கஷ்டப் பட்டிருக்கிறார். கௌதம் கார்த்திக் படத்துக்காக தன் நிறத்தை மாற்றி, பாடி லாங்குவேஜ் மாற்றி நடித்துள்ளார். சிம்ரன் முதல் படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன், அதை வைத்து பார்க்கையில் இந்த படத்தில் நாயகி சனா, சிம்ரன் விட்டு சென்ற இடத்தை பிடிப்பார் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*